Breaking News

எம்மைப் பேரம்­பேசும் சக்­தி­யாக மாற்­று­வது தமிழ் மக்­களின் கைக­ளி­லேயே தங்­கி­யுள்­ளது


ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் மாபெரும் வெற்­றிக்கு தமிழ் மக்­களே கார­ண­மாக இருந்­தார்கள். அது­போல தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பை வெற்­றி­பெறச் செய்­வது தமிழ் மக்­களின் கடப்­பா­டாகும். 



எமது இலட்­சி­யத்தை வீண­டிக்­காமல் எல்­லோ ரும் ஒன்­றி­ணைந்து கூட்­ட­மைப்­பிற்கு வாக்­க­ளித்து அதனை வெற்­றி­பெறச் செய்ய வேண்டும். இதன்­ மூ­லமே அர­சாங்­கத்­தையும் சர்­வ­தே­சத்­தையும் நாம் விழிப்­ப­டையச் செய்­யலாம். அது­மாத்­தி­ர­மன்றி, நாம் இந்த நாட்டின் பேரம் பேசும் சக்­தி­யாக மாற வேண்டும். அதற்­கான

சக்­தியை வழங்­கு­வது தமிழ் மக்­களின் கரங்­க­ளி­லேயே தங்­கி­யுள்­ளது. வெறு­மனே உதிரிக் கட்­சி­க­ளுக்கு வாக்­க­ளித்து தமிழ் மக்­களின் இலட்­சி­யத்தை சித­ற­டிக்க வேண்­டா­மென நான் கேட்டுக் கொள்­கின்றேன். இவ்­வாறு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற குழுத் தலை­வரும் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான இரா.சம்­பந்தன் நேற்று திரு­கோ­ண­ம­லையில் வைத்து கோரிக்கை விடுத்தார்.

சம்­பூரில் விடு­விக்­கப்­பட்ட காணி­களை கைய­ளிக்கும் வகையில் நேற்­றைய தினம் அங்கு விஜயம் செய்­தி­ருந்த கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் அங்கு திரண்­டி­ருந்த கூட்­ட­மைப்பின் ஆத­ர­வா­ளர்கள் மத்­தியில் உரை­யாற்­று­கை­யி­லேயே இவ்­வாறு கூறினார். அவர் மேலும் கூறு­கையில்,

விடு­விக்­கப்­பட்ட சம்­பூரை போல மிக விரைவில் வலி­கா­மமும் அந்த மக்­க­ளுக்­காக விடு­விக்­கப்­படும். கடந்த வௌ்ளிக்­கி­ழமை உயர் நீதி­மன்ற தீர்ப்­புக்­க­மைய சம்பூர் மக்­க­ளுக்கு சொந்­த­மான 818 ஏக்கர் நிலமும் நீதி­மன்­றத்­தினால் விடு­விக்­கப்­பட்­டது. சம்பூர் மக்­களின் நீண்ட கால போராட்­டமே அந்த மக்­க­ளு­டைய மண் விடுவிப்­புக்­கான மூலக்­கா­ர­ண­மாக இருந்­தி­ருக்­கின்­றது. 

கடந்த 9 வரு­ட­கா­ல­மாக எது­வி­த­மான அடிப்­படை வச­தி­க­ளு­மின்றி இம்­மக்கள் முகாம்­களில் வாழ்ந்­தார்கள். கடந்த 25 வரு­டங்­க­ளாக வலி­காமம் மக்­களும் இது போன்ற கஷ்­டங்­களை அனு­ப­வித்­துக்­கொண்­டி­ருக்­கின்­றார்கள். அந்த மக்­க­ளுக்­கான சொந்த நிலங்­களை மிக விரைவில் விடு­வித்­துத்­தர நாங்கள் தொடர்ந்தும் போரா­டுவோம். சுமார் 1000 ஏக்கர் நிலம் வலி­கா­மத்தில் விடு­விக்­கப்­பட்­டி­ருந்­தாலும் இன்னும் 5,000 ஏக்­கர்கள் விடு­விக்­கப்­பட வேண்டும். மேலும் சம்­பூரில் உயர் பாது­காப்பு வல­ய­மா­க­வுள்ள கடற்­படை முகாம் அமைந்­தி­ருக்கும் 237 ஏக்கர் நிலமும் அந்த மக்­க­ளுக்­காக விடு­விக்­கப்­படும்.

உயர்­நீ­தி­மன்­றத்தின் தீர்ப்­பின்­படி சம்பூர் மக்­க­ளுக்­காக விடுவிக்கப்பட நிலத்தின் மீது யாரும் உரிமை பாராட்டவோ, தடை விதிக்கவோ முடியாது. இன்றிலிருந்து சம்பூர் மக்கள் தங்களுடைய சொந்த காணிகளிலேயே குடியேறலாம். தேர்தல் முடிந்தவுடன் வாழ்வாதாரத்துக்கு தேவையான அனைத்து விடயங்களுக்கும் கிழக்கு மாகாணசபை உதவ வேண்டும் என்றார்.