மைத்திரி அணி நேற்றிரவு அவசர கூட்டம் – வேட்புமனு விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி?
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் மகிந்த ராஜபக்சவுக்கு இடமளிப்பது குறித்து, நேற்றிரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனசவின் தலைமையில் முக்கிய கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தக் கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, அமைச்சர்கள், அர்ஜுன ரணதுங்க, எம்.கே.டி.எஸ்.குணவர்த்தன, துமிந்த திசநாயக்க, ராஜித சேனாரத்ன ஆகியோர் கலந்து கொள்ள ஏற்பாடாகியிருந்தது. மகிந்த ராஜபக்சவுக்கு ஆபோட்டியிட இடமளிப்பது குறித்த சர்ச்சை குறித்து இறுதி முடிவெடுக்கவே இந்தக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மகிந்த ராஜபக்சவுக்கு எதிரான- மைத்திரிபால சிறிசேன ஆதரவு அணியினருடனனான இந்தக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. எனினும், இந்தக் கூட்டத்தில் பேசப்பட்ட விடயங்கள், மற்றும் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்த தகவல்கள் இதுவுரை வெளியாகவில்லை.
அதேவேளை, ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளித்த, மாதுளுவாவே சோபித தேரர் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் நேற்றிரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர்.
நேற்றிரவு 8.30 மணியளவில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்தச் சந்திப்பில், தொழிற்சங்கத் தலைவர் சமன் ரத்னப்பிரிய, புரவெசி பலய அமைப்பின் அமைப்பாளர் கலாநிதி காமினி வியங்கொட, ராவய ஆசிரியர் ஜனரஞ்ஜன ஆகியோரும் பங்கேற்றனர். இவர்கள் மகிந்த ராஜபக்சவுக்கு வேட்பாளர் பட்டியலில் இடமளிக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.