தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தொகுதிப் பங்கீட்டில் அதிருப்தியா?
இலங்கையின் பொதுத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் ஏற்பட்டிருக்கும்
தொகுதிப் பங்கீடு, தமிழரசுக் கட்சி தவிர்த்த பிற கட்சிகளால் சுமுகமாக ஏற்றுக்கொள்ளப்பட்டதாகத் தெரிய வில்லை.
இந்த முடிவுகள் ஒரு கட்சியின் நலன்களைக் கருத்திற்கொண்டு மேற்கொண்டதாகத் தெரிவதாகவும், ஒற்றுமையைக் கருத்திற்கொண்டும் மக்கள் எதிர்நோக்கியுள்ள பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண வேண்டியதன் அவசியத்தைக் கருத்திற்கொண்டும் இந்த முடிவுகளை தாங்கள் ஏற்றுக்கொண்டிருப்பதாக கூட்டமைப்பில் இணைந்துள்ள கட்சிகளின் தலைவர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை மாகாண சபையில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் இந்தத் தேரதலில் போட்டியிடுவதற்குத் தடையேற்படுத்தும் வகையில் எந்த முடிவும் கூட்டமைப்பின் இணைப்புக் குழு கூட்டத்தில் முடிவுகள் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகளின் உறுப்பினர்களில் சிலர் இந்தத் தேர்தலில் போட்டியிடவுள்ளனர். ப்ளொட்டின் தலைவரும் வடமாகாண சபையின் உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன், கிழக்கு மாகாண சபையின் உறுப்பினரும், டெலோ கட்சியின் முக்கியஸ்தருமாகிய ஜனா ஆகியோரும் இந்தத் தேர்தலில் போட்டியிடவுள்ளனர்.