Breaking News

மகிந்த – மைத்திரி அணிகளிடையே புதிய சர்ச்சை

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் பட்டியலில் இருந்து, மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க நீக்கப்பட்டுள்ளதால் மகிந்த – மைத்திரி ஆதரவுத் தரப்பினரிடையே புதிய குழப்பம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க, மகிந்த ராஜபக்சவின் மிகத் தீவிர விசுவாசியாக இருந்து வருகிறார். மகிந்த ராஜபக்சவை பிரதமராக்குவோம் என்று நடத்தப்பட்ட பரப்புரைக் கூட்டங்கள் பலவற்றை அவரே முன்னின்று நடத்தியிருந்தார்.

மைத்திரிபால சிறிசேனவின் கட்டுப்பாட்டையும் மீறி மகிந்த ராஜபக்சவுக்கு பகிரங்க ஆதரவு தெரிவித்து வந்த பிரசன்ன ரணதுங்க கம்பகா மாவட்டத்தில் போட்டியிட விண்ணப்பித்திருந்தார். அவருக்கு, அங்கு இடமளிப்பதற்கு, சந்திரிகா குமாரதுங்க கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

பிரசன்ன ரணதுங்கவை கம்பகா மாவட்டத்தில் போட்டியிட அனுமதிக்கக் கூடாது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு, சந்திரிகா குமாரதுங்க கடுமையான அழுத்தம் கொடுத்து வருகிறார். ஏற்கனவே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில், ரணதுங்க குடும்பத்தைச் சேர்ந்த இருவருக்கு இடமளிக்கப்பட்டுள்ள நிலையில், மூன்றாவதாக ஒருவருக்கு வாய்ப்பளிக்கக் கூடாது என்று அவர் கூறியுள்ளார்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ருவான் ரணதுங்கவுக்கு, கம்பகாவில் போட்டியிட ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அத்தனகல அமைப்பாளராக நியமிக்கப்பட்ட அர்ஜுன ரணதுங்கவும் கம்பகாவில் போட்டியிடுகிறார்.

இந்தநிலையில், ருவான், அர்ஜுன, பிரசன்ன ஆகிய சகோதரர்களை ஒரே மாவட்டத்தில் போட்டியிட அனுமதிக்க முடியாது என்று சந்திரிகா கூறியுள்ளார். ஆனால், அர்ஜுன ரணதுங்கவின் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படும் என்பதாலேயே, பிரசன்ன ரணதுங்கவை வெட்டி விட சந்திரிகா முனைவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதேவேளை, மகிந்த ராஜபக்சவுக்கு நெருக்கமான பலரை கம்பகா மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அணி தடுத்து வருவதாக மகிந்த அணி குற்றம்சாட்டியுள்ளது.

மகிந்த ராஜபக்சவுக்கு நெருக்கமான மாகாணசபை உறுப்பினர்களான பிரசன்ன ரணதுங்க, சமன்மல்லி சகலசூரிய, சஹான் பிரதீப், குணசிறி ஜெயநாத், ஆனந்த ஹரிஸ்சந்திர மற்றும் மெரில் பெரேரா ஆகியோருக்கே கம்பகா மாவட்டத்தில் போட்டியிடும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை களுத்துறை மாவட்டத்தில் மகிந்த ராஜபக்சவின் தீவிர ஆதரவாளர்களான மாகாணசபை உறுப்பினர்கள் சம்பத் அத்துகொரள, பியல் நிசாந்த, லலித் எல்லாவல ஆகியோருக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, பிரசன்ன ரணதுங்கவுக்கு போட்டியிட இடமளிக்கப்படாத விடயம், மகிந்த தரப்பை கடுமையாக சினங்கொள்ள வைத்துள்ளதாகவும், இதனால் அவர்கள் மாற்று ஏற்பாடுகள் குறித்து ஆராய்ந்து வருவதாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன.