முன்னாள் போராளிகளை உடனடியாக இணைத்துக்கொள்வது சாத்தியமற்றது – சுரேஸ்
அரசியல் கட்சியாக இயங்கும் முன்னாள் போராளிகளை கூட்டமைப்பிற்குள் உடனடியாக இணைத்துக்கொள்வது சாத்தியமற்றது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது;
போராளிகளாக அல்லது போராளிகளுக்காக அவர்கள் தொழிற்பட வேண்டும் என்று கூறினால் ஒட்டுமொத்த போராளிகளையும் திரட்டி அதற்கான மாநாட்டை நடத்தி அதனுடைய பிரதிநிதிகளாகத் தம்மை வெளிக்காட்ட வேண்டிய தேவை இருக்கின்றது. அல்லது இவர்கள் யாரை பிரதிநிதித்துவப்படுத்துவார்கள் என்ற கேள்வி எழும். உடனடியாக இவர்களை எங்களுடன் இணைத்துக்கொண்டு செயற்படுவது சாத்தியமில்லை என்பது வெளிப்படையான விடயம். என்றார்.
அத்துடன், போராளிகளுக்கோ போராளிகளின் உணர்வுகளுக்கோ தாம் எதிரானவர்கள் அல்லர் என சுட்டிக்காட்டிய சுரேஸ் பிரேமச்சந்திரன், விடுதலைப் புலிகள் முன்வைத்த கோரிக்கைகள் தான் தமிழ் மக்களின் கோரிக்கைகள் எனவும் அந்த கோரிக்கைகளைத் தோற்கடித்ததாக பிரசாரம் வருமாயின் அது தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்திற்கு உகந்ததல்ல எனவும் குறிப்பிட்டார்.