"வடக்கையும் கிழக்கையும் இணைக்க சிலர் முயற்சி''
ஒன்றிணைந்த நாட்டுக்குள் தேசிய பிரச்சினைக்கான தீர்வு என்ற நிலைப்பாட்டில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க செயற்படவில்லை. நாட்டை பிரிக்கும் சதித்திட்டம் தொடர்பில் மக்களிடம் வெளிப்படையாக பேச மறுக்கின்றார்,
என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
தந்திரமான முறையிலேனும் அதிகாரத்தை கைப்பற்றவேண்டும் என்ற எண்ணத்தில் ரணில் அரசியலில் காய்நகர்த்துகின்றார் எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செய்தியாளர் சந்திப்பு நேற்று கொழும்பில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இதில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
ஆட்சி மாற்றத்தின் பின்னரான கடந்த ஆறுமாத காலத்தில் மக்கள் நல்ல படிப்பினையினை கற்றுள்ளனர். இந்த அரசாங்கம் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள், சவால்கள் அனைத்தையும் ஆறுமாத காலத்தில் நிறைவேற்றவில்லை என்ற கருத்து இன்று நாட்டில் அனைத்து மக்கள் மத்தியிலும் நிலவுகின்றது.
எனவே அந்த வேதனையுடனும் இந்த அரசாங்கத்தின் தன்மை என்னவென்பதை அறிந்துமே இம்முறை மக்கள் தேர்தலில் வாக்களிக்கவுள்ளனர்.நல்லாட்சியை எதிர்பார்த்தே கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது 62 இலட்சம் மக்கள் வாக்களித்தனரே தவிர மக்கள் வரம் இல்லாத, மக்களால் தெரிவுசெய்யப்படாத ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியை அமைக்க அல்ல. ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் வரலாற்றில் அவரை ஒரு தோல்வியின் தலைவராகவே நாம் கருதுகின்றோம். கடந்த காலத்தில் 25 தடவைகள் அவர் தேர்தல்களில் தோல்வியை தழுவியுள்ளார். இரண்டு தடவைகள் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்டு தோல்விகண்டவர், இரண்டு தடவைகள் பிரதமருக்கான போட்டியிலும் தோல்வி கண்டவர். ஆகவே அவரால் போட்டியிட்டு வெற்றிபெற முடியாது.
மக்கள் இதுவரையில் ரணிலை தலைவராக ஏற்றுக்கொள்ளவில்லை. அவரை நம்பி மக்கள் வாக்களிக்க தயாராகவுமில்லை. இப்போது கிடைத்திருக்கும் பிரதமர் அதிகாரமும் ஒரு விதத்தில் முகமூடி அதிகாரமாகவே குறிப்பிடப்பட வேண்டும். அவருக்கு கிடைத்துள்ள அதிகாரங்கள் அனைத்துமே மக்கள் வரத்துக்கு முரணானதாகும். அதேபோல் இன்றும் நாட்டில் அசாதாரண செயற்பாடுகள் பலமடைந்துள்ளன.
வடக்கு கிழக்கை ஒன்றிணைக்கும் முயற்சிகளும், தனிநாட்டுக் கோரிக்கையும் ஒரு சாராரின் அரசியல் செயற்பாடுகள் மூலம் முன்னெடுக்கப்படுகின்றது. நாட்டின் தேசிய பாதுகாப்பு, ஒன்றிணைந்த நாடு என்ற கோட்பாட்டில் பிரதமர் இல்லை. ஊடகங்களின் நேரத்தையும் மக்களின் நேரத்தையும் வீணடித்து காலத்தை கடத்தும் வேலைத்திட்டங்களே மேற்கொள்ளப்படுகின்றது.
மேலும் நாட்டின் தேசியக் கொடியை எரிக்க வேண்டும் என தேரர் ஒருவர் குறிப்பிடுகின்றார். அவருக்கு விக்கிரமபாகு கருணாரத்னவின் ஆதரவும் ரணிலின் ஆதரவும் உள்ளது. ஆகவே இறுதியில் ஐக்கிய தேசியக் கட்சியின் பங்காளிக் கூட்டணியினர் நாட்டின் தேசியத்தை அழிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறான நிலைமைகளை மக்கள் நன்றாக உணர்ந்துகொள்ள வேண்டும்.
அதேபோல் ரணில் விக்கிரமசிங்க எந்தவகையிலேனும் ஆட்சியை கைப்பற்ற முயற்சிக்கின்றார். அதற்கான நடவடிக்கைகளை திட்டமிட்டு காய் நகர்த்துகின்றார்.ஆகவே மக்கள் இந்த சதித் திட்டங்களை சரியாக இனங்கண்டுகொள்ள வேண்டும். மீண்டும் மாற்றம் ஒன்றினை ஏற்படுத்த மக்கள் முவர வேண்டும்.