Breaking News

ஐந்து மத்திய குழு உறுப்பினர்களை நீக்குவதற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சி தீவிர முயற்சி

நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் ஐந்து பேரை, மத்திய குழுவில் இருந்து விரைவில் நீக்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட மகிந்த ராஜபக்சவுக்கு இடமளிக்கப்பட்டதை அடுத்து, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்களான அமைச்சர்கள் ராஜித சேனாரத்ன, எம்.கே.டி.எஸ்.குணவர்த்தன, அர்ஜுன ரணதுங்க, எஸ்.பி.நாவின்ன மற்றும் மேல் மாகாணசபை உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர ஆகியோர் நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளர்களாகப் போட்டியிடுகின்றனர்.

இவர்களைக் கட்சியில் இருந்து நீக்குவதற்காக, கட்சியின் மத்திய குழுவை அவசரமாக கூட்டுவதற்கு, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலர் அனுர பிரியதர்சன யாப்பா அழைப்பு விடுத்திருந்தார்.

எனினும், அதற்கு கட்சியின் தலைவர் என்ற முறையில் அதிபர் மைத்திரிபால சிறிசேன தடை விதித்ததுடன், ஹிருணிகா பிரேமச்சந்திரவின் தீவிர ஆதரவாளரும், சுதந்திரக் கட்சி மத்திய குழு உறுப்பினரான பிரசன்ன சோலங்காராச்சி நீதிமன்றம் சென்று தடை உத்தரவும் பெற்றுக் கொண்டார்.

இதன்படி, எதிர்வரும் 29 ஆம் நாள் வரை, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவை, கட்சியின் தலைவரின் அனுமதியின்றி கூட்டுவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இந்தநிலையில், விரைவில் சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவைக் விரைவில் கூட்டி, நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து போட்டியிடும், ஐந்து மத்திய குழு உறுப்பினர்களையும் நீக்குவது தொடர்பாக முடிவுகளை எடுக்க சிறிலங்கா சுதந்திரக் கட்சி நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.