மஹிந்தவுக்கு இடமளித்தால் அரசியலிலிருந்து விலகுவேன்: ஹிருனிக்கா எச்சரிக்கை
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வுக்குமிடையே ஏதேனும் இணக்கப்பாடுகள் ஏற்படுமாகவிருந்தால் தான் அரசியலில் இருந்து விலகுவேன் என மேல் மாகாண சபை உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர எச்சரித்துள்ளார்.
மஹிந்தவை தோற்கடிக்க வேண்டுமென்றே நான் எனது உயிரை பணயம் வைத்து மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்தேன். அந்த நோக்கம் நிறைவேறாது அவர்கள் இருவருக்குமிடையே இணக்கப்பாடுகள் ஏற்பட்டால் உடனடியாக அரசியலில் இருந்து விலகுவேன். என அவர் தெரிவித்துள்ளார்.
தனது தந்தையான பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர கொலையின் பின்னர் கடந்த மாகாண சபை தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டு மாவட்டத்தில் அதிகப்படியான வாக்குகளை பெற்றிருந்தார்.
இந்நிலையில் தனது தந்தையின் கொலை தொடர்பாக மஹிந்த அரசாங்கம் முறையான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஜனாதிபதி தேர்தலில் மைத்திரி அணியுடன் இணைந்து அவரின் வெற்றிக்காக ஹிருணிகா செயற்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.