மஹிந்தவை கட்சியின் பிரதமர் வேட்பாளராக களமிறக்க முடியாது! என்கிறார் ராஜித
எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏனைய கட்சிகளை ஒன்றிணைத்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி யாகவே களமிறங்கும். ஆனால் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதமர் வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவை களமிறக்கும் தீர்மானம் ஜனாதிபதிக்கு இல்லை என்று அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
கட்சி உறுப்பினர்கள் கூட்டத்திலும் இதுவே இறுதித் தீர்மானம் எனவும் அவர் குறிப்பிட்டார். எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் சார்பில் பொது வேட்பாளராக யாரை களமிறக்குவது என்ற சிக்கல் நிலைமை எழுந்துள்ள நிலையில் இது தொடர்பில் அமைச்சரவை பேச்சாளரிடம் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு குறிபிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் ஒன்றிணைந்து ஜனாதிபதி இல்லத்தில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று நேற்று முன்தினம் நடைபெற்றது. இதன்போது கட்சியின் வேட்புமனு தாக்கல் தொடர்பிலும் கட்சியின் பிரதமர் வேட்பாளர் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
அதேபோல் நேற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முக்கிய பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுடனான விசேட சந்திப்பொன்றினை ஜனாதிபதி தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் மேற்கொண்டிருந்தார். இதன்போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இந்தக் கலந்துரையாடலில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்புமனு தாக்கல் தொடர்பில் பேசப்பட்டுள்ளது. அதேபோல் வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்தரக் கட்சியின் தலைமையில் பங்காளிக் கட்சிகள் அனைத்தையும் இணைத்துக்கொண்டு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியாக களமிறக்கும் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
கட்சியை பலப்படுத்துவதே எமது பிரதான எதிர்பார்ப்பாகும். கட்சிக்குள் இரண்டு பிளவுகள் ஏற்படுவதை நாம் விரும்பவில்லை. ஆனால் கட்சியை மீண்டும் சர்வாதிகாரப் போக்கில் பயணிக்க நாம் அனுமதிக்கப்போவதும் இல்லை. இந்த விடயம் தொடர்பில் தொடர்ச்சியாக நாம் ஆராய்ந்து வருகின்றோம். தகுதியான வேட்பாளரை கட்சியின் சார்பில் களமிறக்குவதே எமது நோக்கமாகும்.
கேள்வி:- முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை பிரதமர் வேட்பாளராக களமிறக்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதா?
பதில் - அவ்வாறான இந்தவொரு தீர்மானமும் இன்னும் கட்சிக்குள் எடுக்கப்படவில்லை. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கட்சி உறுப்பினர்கள் பேச்சுவாத்தை நடத்திய போதிலும் மஹிந்தவை களமிறக்கும் திட்டம் இல்லை என்பதை அவர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் இடதுசாரிக் கட்சி தலைவர்களை நேற்றுமுன்தினம் சந்தித்து ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்திய போதும் மஹிந்தவை கட்சியின் இணைத்துக்கொள்ளும் தீர்மானம் இல்லை என தெரிவித்துள்ளார்.
ஆகவே இனிமேலும் மஹிந்தவை கட்சியின் பிரதமர் வேட்பாளராக களமிறக்க முடியாது. அதேபோல் எதிர்வரும் பொதுத் தேர்தலில் மஹிந்தவை போட்டியிட அனுமதிக்கக் கூடாது என சிறிலங்கா சுதந்திரக் கட்சி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வலியுறுத்தியுள்ளனர். இன்னும் சிலர் கட்சியை உடைக்கும் வகையில் செயற்பட்டு வருகின்றனர். ஆகவே அனைத்தையும் கவனத்தில் கொண்டு செயற்படுவோம் எனக் குறிப்பிட்டார்.