மகிந்தவுக்குப் போட்டியாக தேர்தலில் களமிறங்குகிறார் சந்திரிகா
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மகிந்த ராஜபக்சவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட இடமளிக்கப்பட்டால், அவருக்கு போட்டியாக, பிரதமர் பதவிக்கான வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க போட்டியில் குதிப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மகிந்த ராஜபக்ச போட்டியிட முடியுமென்றால் சந்திரிகா குமாரதுங்கவும் களமிறங்குவார் என்று அவரது செயலர் பி.திசநாயக்க நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில், ”முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கம்பகா மாவட்டத்தில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிய அல்லது சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிடுவார்.
கட்சியின் பிரதமர் வேட்பாளராகப் போட்டியிடுமாறு அவரை நாட்டு மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். ஆனால், அரசியலில் இருந்து ஓய்வுபெற்ற அவர், அந்த அழைப்பை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால், கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிட்டு தோல்வியுற்றவர் அந்தப் பதவிக்கு உரிமை கோரும் போது, நாட்டின் தோற்கடிக்கப்படாத தலைவரான சந்திரிகா குமாரதுங்க அதே பதவியை கட்சியிடம் கோருவதற்கு உரிமை உள்ளது.
அவருக்கு போட்டியிடுவதற்கு எல்லா உரிமைகளும் உள்ளன. இது அவரது தந்தையால் உருவாக்கப்பட்ட கட்சி. எனவே அவர் நிச்சயம் போட்டியிடுவார். இரண்டு மூன்று நாட்களில் அவர் தனது முடிவை அறிவிப்பார்” என்றும், சந்திரிகா குமாரதுங்கவின் செயலர் தெரிவித்துள்ளார்.