""ஜனாதிபதி பிரசாரத்தில் ஈடுபடக்கூடாது''
சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக நல்லாட்சியை ஸ்தாபிக்க கடந்த ஜனாதிபதி தேர்தலில் 62 இலட்சம் வாக்குகளை பெற்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் பொது தேர்தலில் எந்த ஒரு பிரசார நடவடிக்கைகளிலும் ஈடுபடக் கூடாது என பிரஜைகள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் அரசியல் மீள் பிரவேசத்திற்கு தனது கட்சியின் சார்பில் வாய்ப்பினை வழங்கி மக்களுக்கு பாரிய துரோகத்தினை செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் ஒரு வரலாற்று தவறினை செய்து விட கூடாது எனவும் அந்த அமைப்பு வலியுறுத்தியது.
நேற்று மருதானையில் அமைந்துள்ள சன சமூக நிலையத்தில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே ஜனநாயக பிரஜைகள் அமைப்பினர் மற்றும் பல்வேறு தொழிற்சங்கங்களை பிரதிநிதிப்படுத்தும் பிரதிநிதிகள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.
இதன் போது ஒன்றினைந்த தொழிற்சங்கத்தின் ஏற்பட்டாளர் சமன் ரத்னப்பிரிய குறிப்பிடுகையில்
கடந்த ஜனாதிபதி தேர்தலில் சர்வதிகார ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து நல்லாட்சியை ஏற்படுத்தவே மூவின மக்களும் ஒன்றிணைந்து பொது வேட்பாளாராக களமிறங்கிய மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்து நல்லாட்சிக்கு வித்திட்டனர்.
அந்தவகையில் அண்மைக் காலங்களில் ஜனாதிபதி மீது மக்கள் வைத்திருந்த அனைத்து நம்பிக்கைகளும் வீனடிக்கப்பட்டுள்ளது. காரணம் தனது ஆட்சிகாலத்தில் வெறுமனே சுகபோகங்களுக்காக இனங்களுக்கிடையிலான நல்லிணகத்தை சீர்குழைத்து ஊழல் மிக்க சர்வாதிகார ஆட்சியை மேற்கொண்டு எமது பொருளாதாரத்தை வீழ்ச்சி பாதைக்கு கொண்டு சென்ற முன்னாள் ஜனாதிபதிக்கு மீண்டும் ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் எதிர்வரும் பொது தேர்தலில் போட்டியிடுவதற்கு ஜனாதிபதியினால் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளமையே ஆகும்.
மைத்திரிபால சிறிசேனவின் இவ்வாறான தீர்மானம் தொடர்பில் இன்று அனைத்து மக்களும் அதிருப்தியடைந்துள்ளனர். இவ்வாறான நிலையில் எதிர்வரும் பொது தேர்தலில் எந்த ஒரு கட்சியையோ அல்லது வேட்பாளர் ஒருவரையோ பிரதிநிதிதுவப்படுத்தி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எந்த ஒரு பிரச்சார நடவடிக்கைகளிலும் ஈடுபட கூடாது. அவ்வாறு அவர் ஈடுபடும் பட்சத்தில் அவர் மக்களுக்கும் எமது நாட்டிற்கும் செய்திடும் பாரிய துரோகமாக அது அமைந்துவிடும்.
மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிகாலத்தில் இனங்களுக்கிடையே நல்லிணக்கம் முற்றுமுழுவதுமாக சீர்குழைக்கப்பட்டது. அரச சொத்துகள் உட்பட ஏனைய அனைத்தும் கொள்ளையிடப்பட்டன. மஹிந்தவின் குடும்பமே மக்களின் அனைத்து சொத்துகளையும் சூறையாடியுள்ளது. இவ்வாறான நிலையில் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பிலான அனைத்து விசாரணைகளும் சட்டத்தின்படி இடம் பெற்று வரும் நிலையில் ஊழல் குற்றசாட்டுகளில் இருந்து தனது குடும்ப அங்கத்தவர்களை காப்பாற்றவே இவரின் அரசியல் மீள் பிரவேசம் அமைந்துள்ளது. இதனை மக்கள் நன்கு புறிந்து செயற்பட வேண்டியது அவசியமாகின்றது.
பல்வேறு சூழ்ச்சிகளை மேற்கொண்டு எதிர்வரும் பொதுதேர்தலில் போட்டியிடவுள்ள இவரை ஒரு போதும் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து வெ ளியேறிய அதிருப்தியாளர்களும் ஜாதிக ஹெல உறுமய தலைமையிலான நல்லாட்சிக்கான தேசிய கூட்டணியின் பிரதிநிதிகளும் ஒன்றினைந்து ஸ்தாபித்துள்ள நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினை நாம் வரவேற்கிறோம்.அதற்கான அனைத்து ஆதரவுகளையும் வழங்க தயாராகவுள்ளோம். மீண்டும் நல்லாட்சியை ஏற்படுத்த நினைக்கும் எந்த ஒரு தரப்பினருக்கும் நாம் ஆதரவை தர எல்லா சந்தர்ப்பத்திலும் தயாராகவே உள்ளோம்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதி வழங்கி அவரின் கீழ் செயற்பட்ட ஒரு சில தரப்பினருக்கு வாய்ப்புக்களை மறுத்துள்ளமையானது மிகவும் வேடிக்கையானது. இவ்வாறான நாடகங்களை அறங்கேற்ற நினைக்கும் கட்சிகள் தொடர்பில் எதிர்வரும் காலங்களில் மக்கள் சிந்தித்து செயற்பட வேண்டும்.
சர்வதிகார ஊழல் நடவடிக்கைகளை முற்றுமுழுவதுமாக இல்லாதொழிக்கும் தீர்க்கமான தேர்தல் ஒன்றை எதிர்நோக்க தயாராக இருக்கும் மக்கள் எவ்வாறான சந்தர்ப்பத்திலும் மீண்டும் அடிப்படை வாதிகளுக்கும், இனவாதிகள் மற்றும் ஊழல் வாதிகளுக்கு மீண்டும் இடமளிக்க கூடாது என்றார்.