Breaking News

மகிந்தவைப் பிரதமராக்கும் கோசத்துடன் அனுராதபுரவில் தொடங்கியது பரப்புரை

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முதலாவது தேர்தல் பரப்புரைக் கூட்டம் இன்று மாலை இலங்கையி்ன் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் அனுராதபுரவில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் தலைவர்கள் பங்கேற்றிருந்தனர்.

இந்தப் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றியவர்கள் அனைவரும் மகிந்த ராஜபக்சவை அடுத்த பிரதமராக்க வேண்டும் என்று வலியுறுத்தி உரையாற்றினர். மகிந்த ராஜபக்சவின் படங்கள், பதாதைகள் மட்டுமே வைக்கப்பட்டிருந்த இந்தக் கூட்டத்தில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவரான மைத்திரிபால சிறிசேனவின் எந்த அடையாளத்தையும் காணமுடியவில்லை.

இன்றைய கூட்டத்தில் விமல் வீரவன்ச, தினேஸ் குணவர்த்தன, திஸ்ஸ விதாரண, வாசுதேவ நாணயக்கார, சரத் என் சில்வா, மகிந்த ராஜபக்ச, சுசில் பிரேமஜெயந்த உள்ளிட்டோர் உரையாற்றினர்.

இவர்களின் உரைகளில், விடுதலைப் புலிகளைத் தோற்கடித்த மகிந்த ராஜபக்ச பிரதமராக்கப்பட வேண்டும் என்பதை மையப்படுத்தியதாகவும், மகிந்த ராஜபக்சவினால் வென்றெடுக்கப்பட்ட சுதந்திரம், இறைமை என்பன இப்போது கேள்விக்குறியாகியிருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.

விமல் வீரவன்ச தனது உரையில், மகிந்த ராஜபக்ச, கோத்தாபய ராஜபக்ச மற்றும் 41 இராணுவ அதிகாரிகளுக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுகளை சுமந்தும் ஐ.நா அறிக்கை வரும் செப்ரெபம்பரில் வெளிவரவுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

திஸ்ஸ விதாரண தனது உரையில், புதிய நாளுமன்றம் நிறைவேற்று அதிகாரத்தை அதிபர் ஆட்சி முறையை முற்றாக நீக்கி விட்டு, மகிந்த ராஜபக்ச நிறைவேற்று அதிகாரப் பிரதமர் பதவியை வகிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.இன்றைய கூட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்குபற்றியிருந்தனர்.