'நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் எனது விருப்பம் நிராகரிப்பு'
இலங்கையில் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் இன்று திங்கட்கிழமை 6-ம் திகதி முதல் 15-ம் திகதி வரையில் தேர்தல் திணைக்களத்தினால் ஏற்றுக்கொள்ளப்படவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தமது வேட்பாளர் பட்டியல்களை தயாரிப்பதில் மும்முரமாக ஈடுபட்டிருக்கின்றன.
தனித்துப் போட்டியிடுவதா- இணைந்து போட்டியிடுவதா என்பதைத் தீர்மானிக்கும் நடவடிக்கைகளிலும் பல்வேறு அரசியல் கட்சிகளும் இறங்கியிருக்கின்றன.
வடக்கு கிழக்குப் பிரதேசத்தின் முக்கிய அரசியல் கூட்டணியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய கூட்டம் இன்று வவுனியாவில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கிடையிலான வேட்பாளர் ஒதுக்கீடு தொடர்பாக இந்தக் கூட்டத்தில் இறுதி முடிவெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கிய யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை ஒன்பதிலிருந்து ஏழாகக் குறைக்கப்பட்டுள்ளதையடுத்து, அங்கு வேட்பாளர்களைத் தெரிவு செய்வதில் கூட்டமைப்பின் கட்சிகளுக்கு சிரமங்கள் ஏற்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து அங்கு கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களைக் களமிறக்குவதற்குத் தீரமானிக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
இந்த நிலையில் கடந்த வடமாகாண சபைத் தேர்தலில் இரண்டாவது நிலையில் அதிகூடிய வாக்குகளைப் பெற்ற அனந்தி சசிதரன், இந்தப் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்வந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
இவர், விடுதலைப்புலிகளின் முன்னாள் திருகோணமலை மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளராக இருந்த எழிலன் என்றழைக்கப்படும் சின்னத்துரை சசிதரனின் மனைவி.
போரினால் பாதிக்கப்பட்ட பெண் என்பதனாலும், இறுதிப் போரின் முக்கிய சாட்சி என்ற வகையிலும், நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து இலங்கையின் போர்க்குற்றம், மனித உரிமை மீறல்கள் போன்ற விடயங்களில் நாடாளுமன்றத்திலும் சர்வதேச அரங்கிலும் குரல் கொடுப்பதற்கான ஒரு சந்தர்ப்பமாகவே இதனைக் கருதுவதாக அனந்தி சசிசதரன் கூறினார்.
இந்தத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பைத் தருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் ஏற்கனவே தான் கோரியிருப்பதாகவும் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.
எனினும், அது தொடர்பில் இன்னும் தனக்கு முடிவு எதனையும் சம்பந்தன் தெரிவிக்கவில்லை என்று கூறிய அவர், தனக்கு வேட்பாளர் பட்டியலில் இடம் வழங்கப்படமாட்டாது என்று தமிழரசுக் கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.
தன்னை தேர்தலில் போட்டியிடுமாறு தனது ஆதரவாளரகள் கோரி வருவதாகவும், தமிழரசுக் கட்சியில் இல்லாவிட்டாலும், வேறு கட்சியின் ஊடாகவாவது தேர்தலில் போட்டியிடுமாறு அவர்கள் வலியுறுத்துவதாகவும் தெரிவித்த அவர், இது குறித்து தான் இன்னும் முடிவு எதனையும் எடுக்கவில்லை என்றும் கூறினார்.