பதவி விலகாமலேயே அதிகளவு மாகாணசபை உறுப்பினர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டி
மாகாணசபை உறுப்பினர்களாகவும், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களாகவும் இருந்து கொண்டே, நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட முடியும் என்பதால், இம்முறை அதிகளவான மாகாணசபை உறுப்பினர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மூன்று மாகாண முதலமைச்சர்கள் தமது பதவியை விட்டு விலகாமலேயே, எதிர்வரும் ஓகஸ்ட் 17ஆம் நாள் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், போட்டியிடுகின்றனர். ஊவா மாகாண முதலமைச்சர் ஹரீன் பெர்னான்டோ பதுளை மாவட்டத்திலும், மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க கம்பகா மாவட்டத்திலும், வடமேல் மாகாண முதல்வர் தயாசிறி ஜெயசேகர குருநாகல மாவட்டத்திலும் போட்டியிடுகின்றனர்.
நாடாளுமன்றத் தேர்தல் சட்டங்களில் உள்ள குறைபாடுகளினால் தான், மாகாண முதலமைச்சர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் பதவியில் இருந்து கொண்டே நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதாக தேர்தல் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாகாணசபை உறுப்பினர்கள், அந்தப் பதவியில் இருந்து கொண்டே, நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு நாடாளுமன்றத் தேர்தல் சட்டம் இடமளித்துள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் ஆர்எம்.ஏ.எல்.இரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதனால், மாகாண முதலமைச்சர்கள், அமைச்சர்கள் தமது சிறப்புரிமையைப் பயன்படுத்தி தேர்தல் பரப்புரைகளை மேற்கொள்ளும் நிலை இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, தற்காலிகமாக அவர்களை தமது பணியகங்களில் இருந்து விடுப்பை பெற்றுக் கொள்ளுமாறு தேர்தல் திணைக்களம் கோரவுள்ளதாகவும் மேலதிக தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, மாகாணசபைத் தேர்தல் சட்டத்தின்படி, மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட விரும்பும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், முதலில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை விட்டு விலக வேண்டும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
55 உறுப்பினர்களைக் கொண்ட தென்மாகாணசபையின் 23 உறுப்பினர்கள் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றனர். தென்மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர், சபை முதல்வர் ஆகியோரும் போட்டியில் குதித்துள்ளனர். ஐதேக சார்பில் 9 தென் மாகாணசபை உறுப்பினர்களும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் 7 தென்மாகாணசபை உறுப்பினர்களும் நாடாளுமன்றத் தேர்தலில் களமிறங்கியுள்ளனர்.
ஜேவிபியின் ஐந்து தென்மாகாண சபை உறுப்பினர்களும், ஜனநாயக கட்சியின் 2 உறுப்பினர்களும் கூட இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணசபையின் உறுப்பினர்கள் சிலரும் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.