ஐ.நா அறிக்கையை மகிந்த சாதகமாக்கிக் கொள்ளலாம் – மேற்குலக நாடுகள் கவலை
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் நாள் தீர்மானிக்கப்பட்டதில், ஐ.நாவின் விசாரணை அறிக்கையும் முக்கிய பங்காற்றியதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், ஐ.நா விசாரணை அறிக்கை வெளியிடப்படுவதையும் கருத்தில் கொண்டே, நாடாளுமன்றத் தேர்தல் நாள் தீர்மானிக்கப்பட்டது. வெளிப்படையாக கூறப்படாது போனாலும் கூட, ஐ.நா அறிக்கை வெளியீடும், நாடாளுமன்றத் தேர்தலை தீர்மானிப்பதில் கருத்தில் கொள்ளப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார்.
ஐ.நா விசாரணை அறிக்கை செப்ரெம்பரில் வெளிவரவுள்ளது. ஆனால், ஓகஸ்ட் மாத பிற்பகுதியில் இந்த அறிக்கை வெளியே கசியலாம் என்று இராஜதந்திர வட்டாரங்கள் எச்சரித்த்தாக, மைத்திரிபால சிறிசேனவின் உதவியாளர் ஒருவர் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
அந்த அறிக்கை இலங்கையை விமர்சிப்பதாக அமைந்தால் ராஜபக்ச அதனை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்புகள் உள்ளன. வெளிநாட்டுத் தலையீடுகள் குறித்து அவர் பரப்புரை செய்து கிராமப்புறங்களில் ஆதரவு தேடிக் கொள்ளும் நிலை ஏற்படும்.
அதேவேளை, ஐ.நா அறிக்கை ராஜபக்சவுக்கு உதவியாக அமைந்து விடக் கூடும் என்று சில மேற்குலக நாடுகள் கவலை கொண்டுள்ளதாக, வெளிநாட்டு இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனாலேயே விரைவாக தேர்தலை நடத்துமாறு மைத்திரிபால சிறிசேனவக்கு மேற்குலக நாடுகள் அழுத்தம் கொடுத்திருந்தன என்று ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.