மூன்றாவது அணி மூலம் மாற்றத்தை ஏற்படுத்துவோம்! அத்துரலிய ரத்ன தேரர் கூறுகின்றார்
இன்று மக்களுக்கு தேவைப்படுகின்றது. அந்த அணியை அமைத்து மாற்றத்தை கொண்டுவர நாம் தயார். இன,மத பேதமின்றி இந்த அணியில் அனைவரும் கைகோர்க்க வேண்டும் என்று தூய்மைக் கான நாளை அமைப்பின் தலைவர் அத்துரலியே ரத்ன தேரர் அழைப்பு விடுத்துள்ளார்.
மஹிந்த, ரணிலை நம்பி மீண்டும் ஏமாற வேண்டாம் எனவும் அவர் தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியில் இருந்து ஜாதிக ஹெல உறுமைய வெளியேறியதை அடுத்து தனிக் கூட்டணியை அமைக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில் அது தொடர்பில் வினவிய போதே ஜாதிக ஹெல உறுமைய கட்சியின் இணைத் தலைவரும் தூய்மைக்கான நாளை அமைப்பின் தலைவருமான அதுரலியே ரத்ன தேரர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
இந்த நாடு கடந்த காலங்களில் பல சிக்கலுக்கு முகம் கொடுத்திருந்தது. கடந்த முப்பது ஆண்டுகாலமாக இந்த நாடு தவறான பாதையில் பயணித்தமைக்கு இலங்கையின் சிங்கள தலைமைகளும் பொறுப்புக் கூற வேண்டும். அவசியமான உரிமைகளை வடக்கு மக்களுக்கு அன்று பெற்றுக் கொடுத்திருந்தால் இவ்வாறான இழப்புகள் எவையும் இடம்பெற்றிருக்காது.
அதேபோல் தமிழ் தலைமைகளை சந்தேகக் கண்ணில் பார்க்கும் நிலைமையும் ஏற்பட்டிருக்காது. கடந்த பத்து ஆண்டுகளில் இலங்கையின் அரசியல் பாதை மிகவும் மோசமானதாகவே அமைந்தது. நாட்டின் வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டது. மதக்கலவரங்களையும் இன முரண்பாடுகளையும் தோற்றுவிக்கும் வகையில் அரசாங்கம் நடந்து கொண்டது.அபிவிருத்திகள் என்ற பெயரில் இலங்கையின் வளங்களை வெளிநாடுகளுக்கு விற்றனர்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் மூலம் நாட்டில் நல்ல மாற்றம் ஒன்றை மக்கள் எதிர்பார்த்தனர். ஆட்சிமாற்றம் ஒன்று அவசியமானதாக இருந்தது. ஆனால் ஏற்பட்டுள்ள மாற்றமும் நாட்டுக்கு நல்லதாக அமையவில்லை. கூட்டு அரசாங்கம் தனது நூறு நாட்களை சரியாக கையாண்டாலும் அதன்பின்னர் இழுத்தடிப்புகள், ஏமாற்று நடவடிக்கைகளுமே அதிகரித்துவிட்டன.
ஆகவே மக்கள் இந்த அரசாங்கத்தின் மீதும் நமிக்கை இல்லாத நிலைமைக்கு போய்விட்டனர். பாராளுமன்றத்தில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதிலும் புதிய அரசாங்கத்தில் மக்களின் அபிலாசைகளை வென்று கொடுப்பதிலும் பிரதமர் ரணில் தவறிவிட்டார். கடந்த காலங்களில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ எவற்றைச் செய்தாரோ அதையே இந்த அரசாங்கமும் செய்துள்ளது. ஆகவே மக்களுக்கு இப்போது நல்லதொரு, நம்பிக்கையான மாற்றம் அவசியமானதாகும். ஆனால் அந்த மாற்றத்தை இந்த இரண்டு பிரதான கட்சிகளினாலும் மேற்கொள்ள முடியாது என்பதை எம்மால் குறிப்பிட முடியும்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி தனக்கான பிரதமர் வேட்பாளார் யார் என்பதை தெரிவு செய்வதில் தொடர்ச்சியாக சிக்கல்களை எதிர்கொள்கின்றது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை வீழ்த்த அணிதிரண்ட கூட்டணிக்கு இப்போது மீண்டும் மஹிந்தவின் ஆதரவு தேவைப்படுகின்றது.
அதேபோல் ஐக்கிய தேசியக் கட்சியும் தமது அதிகாரத்தை தக்கவைக்கும் நோக்கத்தில் செயற்படுகின்றது. வெளிநாட்டு உடன்படிக்கைகள், நாட்டை குழப்பும் சில செயல்களை கடந்த காலத்தில் செய்தனர். இவற்றை மறுக்க முடியாது. இரண்டு கட்சிகளின் அரசாங்கத்திலும் மக்களுக்கான உரிமைகள் முழுமையாக கிடைக்கபெரவில்லை. வழமையான மோசடிக்கார கூட்டணியை மீண்டும் உருவாக்க நாம் அனுமதிக்கக் கூடாது. ஆகவே மக்கள் இப்போது மூன்றாவது தலைமைத்துவத்தை நாடவேண்டியுள்ளது.
மக்களையும் நாட்டையும் சரியான பாதையில் கொண்டு செல்லும் பலமான சக்தியை அமைக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம். ஆகவே நாம் இம்முறை தேத்தலில் மூன்றாவது சக்தியாக களமிறங்க தயாராக உள்ளோம். அதற்கான சகல நடவடிக்கைகளையும் ஆரம்பித்துள்ளோம்.
எமது தேர்தல் திட்டம் தொடர்பில் நாம் கலந்துரையாடி வருகின்றோம். அதேபோல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமும் எமது நிலைப்பாட்டை முன்வைத்துள்ளோம். எமது கூட்டணியில் இணைந்துகொள்ள விரும்பும் அனைவரும் எம்முடன் கைகோர்க்க பகிரங்க அழைப்பு விடுக்கின்றோம். நாட்டை ஜனநாயகத்தின் பாதையில் கொண்டு செல்ல விரும்பும் அனைவரும் எம்முடன் கைகோர்க்கலாம். இதில் தமிழ், சிங்கள, முஸ்லிம் என்ற பாகுபாடு இல்லை எனக் குறிப்பிட்டார்.