இலங்கை அகதிகள் விடயம் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம்
அகதிகள் முகாம்களை மூடி, இலங்கை அகதிகளை அவர்களின் குடும்பத்தினருடன் வாழ அரசு வழிவகை செய்ய வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியினர் நேற்று, தமிழகத்தின் வேலூர் மத்திய சிறையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்துக்கு மாநில ஒருங்கிணைப்பாளர் சாகுல் அமீது தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் கருணாநிதி, செயலாளர் ரமேஷ்குமார் உள்பட 70–க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதன்போது 23 ஆண்டுகளாக சிறையில் தண்டனை அனுபவிக்கும் குற்றமற்ற தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும். 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும்.
அகதிகள் முகாம்களை மூடி, இலங்கை அகதிகளை அவர்களின் குடும்பத்தினருடன் வாழ அரசு வழிவகை செய்ய வேண்டும். 14 ஆண்டுகளாக உள்ள ஆயுள் தண்டனையை 10 ஆண்டுகளாக குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த டி.எஸ்.பி. பன்னீர்செல்வம் தலைமையிலான இன்ஸ்பெக்டர்கள் நாகராஜன், ராமமூர்த்தி, பாண்டி, சீதாராமன், வீரப்பன் மற்றும் பொலிசார் போராட்டத்தில் ஈடுபட்ட 70 பேரை கைது செய்தனர்.