Breaking News

மகிந்தவைத் தோற்கடிக்க ஐதேகவுடன் இணைகிறது மைத்திரி ஆதரவு அணி

நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு இடமளிக்கப்பட்டுள்ளதால் அதிருப்தியடைந்துள்ள, 




மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவான சிறிலங்கா சுதந்திரக் கட்சியினர் ஐதேகவுடன் இணைந்து போட்டியிடத் தீர்மானித்துள்ளனர்.

மகிந்த ராஜபக்சவைத் தோற்கடிப்பதற்கான புதிய கூட்டணியை அமைப்பது குறித்து மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள ராஜித சேனாரத்ன, அர்ஜுன ரணதுங்க, சம்பிக்க ரணவக்க, துமிந்த திசநாயக்க உள்ளிட்டோர் நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து தமது முடிவை அறிவித்துள்ளனர்.

அதேவேளை, நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர் சம்பிக்க ரணவக்கவும், ஏனைய அரசியல் தலைவர்களும், ஐதேகவுடன் இன்று பேச்சுக்களை ஆரம்பிக்கவுள்ளனர். அதேவேளை மகிந்த ராஜபக்சவைத் தோற்கடிப்பதற்கான புதிய அணி ஒன்றைத் தோற்றுவிப்பது குறித்து, ஏற்கனவே ஐதேகவுடன் ராஜித சேனாரத்ன, சம்பிக்க ரணவக்க ஆகியோர் பேச்சுக்களை ஆரம்பித்து விட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

ஐதேகவுடன் இணைந்து மகிந்தவைத் தோற்கடிப்பதற்காக உருவாக்கப்படும் கூட்டணியின் கீழ் போட்டியிட ஒரு தொகுதி சிறிலங்கா சுதந்திரக் கட்சி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் தயாராகியுள்ளனர்.

ராஜித சேனாரத்ன, சம்பிக்க ரணவக்க, அர்ஜுன ரணதுங்க, எஸ்.பி.திசநாயக்க, எம்.கே.டி.எஸ்.குணவர்த்தன, பியசேன கமகே, சரத் அமுனுகம, ரெஜினோல்ட் குரே, சுதர்சினி பெர்னான்டோ புள்ளே, நி யாமல் பெரேரா, அதுரலியே ரத்தன தேரர், ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்டோரே, ஐதேகவுடன் இணைந்து போட்டியிடலாம் என்று தெரிய வருகிறது.

ஏற்கனவே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்புமனுவில் கையெழுத்திட்ட உறுப்பினர்களும், இவ்வாறு ஐதேகவில் போட்டியிடத் திட்டமிட்டுள்ளதாகவும், அவர்கள் தமது கையொப்பத்தை விலக்கிக் கொள்ளவுள்ளதாகவும் இந்தக் கலந்துரையாடல்களில் பங்கேற்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, பிரித்தானியா சென்ற முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க அடுத்த வாரம் நாடு திரும்புவார் என்றும், அதையடுத்து அவர் முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே மகிந்த ராஜபக்சவுக்கு எதிரான புதிய அணியை உருவாக்கும் வகையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்தவர்களுக்கும் ஏனைய குழுக்களுக்கும் இடமளிப்பது தொடர்பாக தீர்மானிப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் சம்மேளனக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.

அதேவேளை அதுரலியே ரத்தன தேரருக்கு இடமளிக்கும் விடயத்தில் ஐதேகவுக்கு சிக்கல் எழுந்துள்ளது. ஐதேகவின் யாப்பில், பௌத்த பிக்குகளுக்கு தேர்தலில் போட்டியிட இடமளிப்பதில்லை என்று கூறப்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டியது அவசியம் என்று ஐதேக உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.