இறுதி வேட்பு மனு பட்டியல் இன்றிரவு ஜனாதிபதியிடம் கையளிப்பு
எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பாக போட்டியிடுவதற்கு வேட்புமனு வழங்குவது தொடர்பான இறுதி முடிவெடுக்கும் குழு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடவுள்ளது.
இதுதொடர்பான கலந்துரையாடல் இடம்பெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வேட்புமனு வழங்குவது தொடர்பாக இறுதி முடிவெடுப்பதற்காக 06 பேர் கொண்ட குழுவொன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவில் அமைச்சர் ராஜித சேனாரத்ன, எஸ்.பி. திஸாநாயக்க, மஹிந்த அமரவீர மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொது செயலாளர் சுசில் பிரேமஜயந்த, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொது செயலாளர் அநுர பிரியதர்ஷன யாப்பா ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.
அதனடிப்படையில் இந்தக் கலந்துரையாடலில் ஐ.ம.சு.கூ. சார்பாக யாருக்கு வேட்புமனு வழங்குவது என்பது தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது. இதற்கிடையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் சிலர் இன்று பிற்பகல் 6 மணியளவில் கொழும்பில் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளனர்.
இந்தக் கலந்துரையாடலின்போது அனைத்து மாவட்டங்களிலும் வேட்புமனு வழங்குவதற்கு முன்மொழியப்பட்டுள்ள பெயர் பட்டியல் தொடர்பில் ஆராயப்படவுள்ளது.