Breaking News

பொதுத்தேர்தலின் பின்னர் ஐக்கிய தேசிய முன்னணி பதிவாகும்: மாநாட்டில் தீர்மானம்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியென்ற பெயரில் யானைச் சின்னத்தில் போட்டியிடுவதற்கும் பொதுத்தேர் தலின் பின்னர் ஐக்கிய தேசிய முன்னணியென்ற பெயரில் புதிய அரசியல் கட்சியாக அதனைப் பதிவு செய்வதற்கும் ஐக்கிய தேசியக் கட்சியினால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நேற்று சனிக்கிழமை கொழும்பு கெம்பல் பார்க் மைதானத்தில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் சம்மேளன கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தத் தீர்மானம் தொடர்பான யோசனை கட்சியின் செயலாளர் கபீர் காசிமினால் சம்மேளன கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. நாட்டை நல்லாட்சிக்குக் கொண்டுசெல்லும் நோக்கத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லும் வகையில் செயற்படும் கட்சிகள் இணைந்து நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியாக இம்முறை தேர்தலில் போட்டியிட்டு தேர்தலின் பின்னர் அதனை ஐக்கிய தேசிய முன்ணியாக பதிவு செய்ய நடவடிக்கையெடுப்போம் என்று அவர் யோசனையை முன்வைத்தார்.

இந்த யோசனையை கட்சியின் பொருளாளர் டீ.எம்.சுவாமிநாதன் வழிமொழிய கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கட்சி உறுப்பினர்களின் அனுமதியைக் கோரினார். இதன்போது சகலரும் கைகளை உயர்த்தி இதற்கு ஆதரவை வழங்கியதையடுத்து இந்த யோசனை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாக ரணில் அறிவித்தார்.

இதேவேளை, அமையப்போகும் அரசாங்கத்தில் பொருளாதார விருத்தி, மக்களின் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தல், ஊழல் மோசடிகளை தடுத்தல், கிராமிய தொழிற்துறைகளை விருத்தி செய்தல் மற்றும் இலவச கல்வியை உறுதிப்படுத்தல் ஆகிய விடயங்களை அடிப்படையாகக் கொண்டு தமது செயற்பாடுகள் அமையவேண்டும் என்றும் இங்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.