பேரம் பேசும் சக்தியை நிலைநாட்ட வேண்டும்! பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் சம்பந்தன் வலியுறுத்தல்
ஜனநாயக சூழல் ஏற்பட்டிருக்கும் நிலையிலும் சர்வதேசம் உற்றுநோக்கிக் கொண்டிருக்கும் வேளையிலும் நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
இதில் எமது பேரம் பேசும் சக்தியை நிலைநாட்டுவதன் மூலமே நிரந்தர அரசியல் தீர்வு என்ற இலக்கை அடையமுடியுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
தமிழ் மக்கள் ஒன்றுபட்டு தமது ஜனநாயக பலத்தை உறுதிப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்ட அவர், வடகிழக் கில் 20 ஆசனங்களை வெற்றிகொள்வதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இலக்கு எனவும் குறிப்பிட்டார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் வடகிழக்கைச் சேர்ந்த கூட்டமைப்பின் முன் னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை, உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற விசேட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் நேற்று வவுனியாவில் நடை பெற்றது.
வவுனியா' வன்னி இன் 'விடுதியில் காலை 10.30இற்கு ஆரம்பமான இக் கூட்டம் பிற்பகல் 1.30 வரை நடைபெற்றது. இதன்போது நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறு செயற்படப்போகின்றது, அதன் இலக்குகள், வியூகங்கள் தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டதுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாண சபை, உள்ளூராட்சி மன்றப் பிரதிநிதிகள் எவ்வாறான பங்களிப்புக்களைச் செய்யவேண்டும் என்பது குறித்து கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இலங்கை தமிழரசுக் கட்சி தலைவர் மாவை. சேனாதிராஜா, பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோரால் விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் பிரதான உரையாற்றுகையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
யுத்தம் நிறைவடைந்து 6 வருடங்கள் கடந்துள்ள நிலையில் மீண்டுமொரு பொதுத் தேர்தலுக்கு முகங்கொடுக்கின்றோம். கடந்த காலத்தில் இரண்டு பாராளுமன்றத் தேர்தல்களுக்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு முகங்கொடுத்துள்ளது. அதேபோன்று மாகாண சபை, உள்ளூராட்சித் தேர்தல்களையும் எதிர்கொண்டுள்ளோம்.
யுத்தம் நிறைவடைந்த பின்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ ஆட்சியிலிருந்த போதே இரண்டு பாராளுமன்றத் தேர்தல்களும் இடம்பெற்றிருந்தன. தற்பொழுது ஜனநாயகத்திற்கு விரோதமான குடும்ப ஆட்சி அகற்றப்பட்டு நல்லாட்சிக்கான புதிய ஆட்சியொன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அமையப்பெற்றுள்ளது. இதனால் மக்கள் தமது ஜனநாயகக் கடமைகளை சுதந்திரமாக நிறைவேற்றுவதற்கு உகந்த சூழல் ஏற்பட்டுள்ளது. இவ்வாறான தருணத்தில் இடம்பெறுகின்ற பொதுத் தேர்தல் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
ஜனநாயகச் சூழல்
பொது மக்கள் தமது ஜனநாயகக் கடமைகளைச் சரியாகச் செய்வதற்குரிய தெளிவுபடுத்தல்களை நாம் முன்னெடுக்கவேண்டும். குறிப்பாக மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் அனைத்து மக்களையும் தமது ஜனநாயகக் கடமைகளை நிறைவேற்றுவதற்கான முக்கியத்துவத்தை அவர்களிடத்தில் எடுத்துக்கூறவேண்டும். தற்போதைய சூழலில் தமிழ்த் தேசியம் தொடர்பாக அனைவரும் இளைஞர்களுக்கு உரிய புரிதல்களை ஏற்படுத்துவது அவசியமானதாகும்.
20 ஆசன இலக்கு
2004ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 22 ஆசனங்களைப் பெற்றிருந்தது. கடந்த வடமாகாண சபைத் தேர்தலின்போது 30 ஆசனங்களைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிச்சயம் கைப்பற்றும் என நான் கூறினேன். அதனை அச் சந்தர்ப்பத்தில் அனைவரும் அக்கருத்தை ஏற்கமுடியாத ஒரு நிலையில் இருந்ததை நான் அறிவேன். வடகிழக்கில் களமிறங்கவுள்ள நாம் இம்முறை 20 ஆசனங்களை வெற்றிபெறுவோம் என்ற இலக்கைக் கொண்டிருக்கின்றோம். இதற்காக அனைவரும் ஒன்றுபட்டு வேற்றுமைகளை மறந்து இலக்கை நோக்கி பயணிக்கவேண்டும்.
முக்கியமான தருணம்
கடந்த காலத்தில் முக்கியமான தேர்தல்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்து வந்தபோதும் இந்தத் தேர்தல் மிக முக்கியமானதாக உள்ளது. தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் சர்வதேச ரீதியாக முதன்மைப்படுத்தப்பட்டிருக்கின்ற நிலையில் இத் தேர்தலை சர்வதேசம் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டு இருக்கின்றது. ஆட்சி மாற்றத்தில் பெரும் சக்தியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருந்துள்ளது.
இந்நிலையில் புதிதாக அமையவுள்ள அரசாங்கத்தின் மூலமே எமது தாயகங்களில் நீடித்து நிலைத்திருக்கக்கூடிய தீர்வொன்றை எட்டுவதற்கான சந்தர்ப்பங்கள் ஏற்படவுள்ளன. இவ்வாறான நிலையில் எமது பேரம்பேசும் பலத்தை உறுதி செய்யவேண்டும். அதன் மூலமே ஐக்கிய இலங்கைக்குள் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட அதிகார பகிர்வினைப் பெற்றுத் தமிழர்கள் அபிலாஷைகளுடன் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் வாழ்வதற்கான ஒரு சூழல் ஏற்படும். அதனை உறுதி செய்யும் வகையிலேயே தமிழ் மக்களின் ஜனநாயக பலமான வாக்குகள் அமையவேண்டும்.