மஹிந்தவுக்கு நியமனம்: மீள்பரிசீலனை செய்வதாக சந்திரிகாவிடம் மைத்திரி வாக்குறுதி
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கான நியமனம் வழங்கப்படும் என எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தை மறுபரிசீலனை செய்வதற்கு தான் தயாராகவிருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்திருக்கின்றார்.
ஜனாதிபதியின் இந்த முடிவுக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க கடுமையான ஆட்சேபனை தெரிவித்ததையடுத்தே, அந்த முடிவை மறுபரிசீலனை செய்வதாக மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருக்கின்றார். மகிந்த விவகாரம் தொடர்பில் சந்திரிகா குமாரதுங்க நேற்றிரவு மைத்திரிபாலவை சந்தித்துப் பேசியுள்ளார்.
மஹிந்தவுக்கு நியமனம் வழங்குவது என எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பில் கட்சிக்குள் பெரும் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது. ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த பலர் ஏற்கனவே அதிலிருந்து வெளியேறி, ஐ.தே.க.வில் போட்டியிடப்போவதாக அறிவித்திருக்கின்றார்கள். ஆட்சி மாற்றத்துக்கு பிரதான பங்களிப்பை வழங்கிய ஜே.வி.பி., ஹெல உறுமய ஆகிய கட்சிகள் ஜனாதிபதியின் இந்த முடிவை கடுமையாக எதிர்த்துள்ளன.
இந்தப் பின்னணியிலேயே சந்திரிகா குமாரதுங்க மைத்திரிபாலவை சந்தித்துப் பேசியுள்ளார். தன்னுடைய முடிவை மறுபரிசீலனை செய்வதாக மைத்திரிபால இந்தச் சந்திப்பின்போது சந்திரிகாவுக்கு உறுதியளித்திருஐப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.