ஐதேகவில் போட்டியிடவுள்ள சிறிலங்கா சுதந்திர கட்சி முக்கிய உறுப்பினர்கள்
மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒரு பகுதியினர் ஐக்கிய தேசிய கட்சியின் சின்னத்தில் போட்டியிட தீர்மானித்துள்ளார்கள்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் தேர்தலில் போட்டியிட முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கு இடமளித்தது உட்பட முன்னணி வேட்பாளர்கள் தெரிவு தொடர்பில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாகவே இவர்கள் இந்த முடிவுக்கு வந்ததாக கூறப்படுகின்றது.
முன்னாள் அமைச்சர்களான ராஜித சேனரட்ண, சம்பிக்க ரணவக்க, எம். கே. டி குணவர்தனா, சரத் அமுனுகம ,அர்ஜூன ரணதுங்க போன்ற அமைச்சர்களும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த முடிவுக்கு வந்துள்ளனர்.
இவர்களது அணியை சேர்ந்த மேல் மாகாண சபை உறுப்பினரான ஹிருணிகா பிரேமச்சந்திரா நேற்று கொழும்பு மாவட்டத்தில் ஒரு வேட்பாளராக ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் பட்டியலில் ஒப்பமிட்டுள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் சின்னத்தில் நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னனியாகவே தாங்கள் போட்டியிட இருப்பதாக இதனை உறுதிப்படுத்திய அமைச்சர் ராஜித சேனரத்ன கூறுகின்றார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி வேட்பாளராக இம் முறையும் ஊழல், மோசடிக்காரர்களுக்கும் போதைப் பொருள், எத்தனோல் தொடர்புடையவர்களுக்கும் இடமளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.இந்த அரசியலை தாங்கள் ஏற்கப் போவதில்லை என்றும் அவர் குறிப்பிடுகின்றார்.