திருடர்களையும் ஊழல் மோசடிக்காரர்களையும் சிறையில் அடைப்போம்
திருடர்களை ஊழல் மோசடிக்காரர்களை சிறையில் அடைப்போம் . அதற்காக ஐ.நாவின் ஊழல் மோசடிகள் பிரகடனத்துக்கமைய புதிய சட்டங்கள் நாட்டில் அறிமுகப்படுத்துவதோடு, விசார ணைகளை மேற்கொள்வதற்காக பொலிஸாருக்கு வெளிநாடுகளில் பயிற்சிகளும் ஆரம்பிக்கப் பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மஹிந்த ஆட்சியில் இலங்கைக்கு வரமறுத்த வெளிநாட்டு முதலீட்டாளர்கள் எமது ஆட்சி வந்ததும் இங்கு வர காத்திருக்கின்றனர் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார். கரனதெனியவில் இடம்பெற்ற ஐ.தே.முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பிரதமர் இங்கு மேலும் தெரிவித்திருப்பதாவது,
ஊழல் மோசடிக்காரர்களை சிறையில் அடைப்போம் அதற்காக ஐ.நாவின் பிரகடனத்திற்கு அமைய புதிய சட்டங்களை கொண்டு வருவோம்.அத்தோடு சர்வதேச ரீதியில் பாரிய ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களை விசாரிப்பதற்கு கண்டுபிடிப்பதற்காக எமது பொலிஸாருக்கு அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளில் தற்போது பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அன்று நாட்டின் சொத்துக்களை கொள்ளையடித்தது போல் மீண்டும் நாட்டின் சொத்துக்களை கொள்ளையடிப்பதற்கு எவருக்கும் இடமளிக்க மாட்டோம்.மோசடிக்காரர்கள் திருடர்களுக்கு பதவி, தராதரம் பார்க்காது தண்டனை வழங்கப்படும்.அமெரிக்கா பிரான்ஸ் போன்ற உலகின் பொருளாதாரத்தில் அபிவிருத்தி கண்ட நாடுகள் மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சிக் காலத்தில் இலங்கையில் முதலீடு செய்ய விரும்பவில்லை என்பதை பகிரங்கமாக அறிவித்தன.
அதேவேளை ஐ.தே முன்னணி ஆட்சியில் இணைந்து செயல்படவும் இங்கு முதலீடுகளை மேற்கொள்ளவும் பல நாடுகள் இப்போதே தமது விருப்பத்தை வெளியிட்டுள்ளன.எனவே நாட்டை எமது ஆட்சியின் கீழேயே அபிவிருத்தி செய்ய முடியும்.ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இன்று பல்வேறு முரண்பாடுகளுக்கு முகம் கொடுத்துள்ளது.ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் மைத்திரிபால சிறிசேனாவை முன்னணியினதும் சுதந்திரக் கட்சியினதும் தலைவராக ஏற்றுக் கொண்டனர்.மஹிந்த சிந்தனையை தூக்கியெறிந்தனர்.
ஆனால் இன்று நல்லாட்சி என்ற மைத்திரியின் வாகனத்தை மஹிந்த சிந்தனையின் பக்கமாக திருப்பிச் செலுத்த முயற்சிக்கின்றனர்.நல்லாட்சி என்ற வாகனத்தை மைத்திரியின் கைகளில் கொடுத்து விட்டு அதனை மஹிந்த சிந்தனை பக்கமாக திருப்புமாறு அழுத்தம் கொடுக்கின்றனர்.தாம் எந்தப் பாதையில் பயணிக்கின்றோம் என்பதை தீர்மானித்துக் கொள்ள முடியாதவர்களை எவ்வாறு நாட்டை சரியான பாதையில் வழிநடத்துவார்கள்.
இவ்வாறான ஒரு கோஷ்டியினால் நாட்டில் அரசியல் சமூக பொருளாதார சீர்திருத்தங்களையோ மக்களுக்கு சுபீட்சத்தையோ வழங்க முடியாது என்பது தான் உண்மையாகும்.நாம் நாட்டை கட்டியெழுப்புவதற்கான பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதற்கான தெளிவான திட்டத்தை முன்வைத்துள்ளோம்.
45 முதலீடுகளை அடையாளம் கண்டுள்ளோம். அதற்கமைய தொழிற்சாலைகள் ஆரம்பிக்கப்பட்டு இளைஞர் யுவதிகளுக்க தொழில்வாய்ப்புக்களை வழங்குவோம் என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.