தேர்தலில் போட்டியிட அனுமதிக்குமாறு அனந்தி எம்மிடம் இதுவரை கோரவில்லை: மாவை
தமிழரசுக் கட்சி மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானங்களுக்கு புறம்பாகவே செயற்பட்டு வரும் திருமதி அனந்தி சசிதரன் வேட்பாளராக தன்னை அனுமதிக்கவில்லை என ஊடகங்களில் தெரிவித்து வரும் கருத்துக்கள் உண்மைக்கு புறம்பானவை என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்தார்.
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழரசுக் கட்சி தன்னை வேட்பாளராக நியமிக்கவில்லை என்றும் தன்னுடைய வாய்ப்பினை மாவை சேனாதிராசா நிறுத்திவிட்டார் என்று கூறிவருகின்றார். இது குறித்து தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவுடன் உதயன் இணையத்தள செய்திப்பிரிவு தொடர்புகொண்டு கேட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
திருமதி . அனந்தி சசிதரன் தன்னை தேர்தலில் வேட்பாளராக நியமிக்குமாறு தமிழரசுக் கட்சியிடம் இதுவரை கோரவில்லை. கோரிக்கை கூட விடுக்காது தனக்கு இடம்தரவில்லை என்று கூறுவது அப்பட்டமான பொய். அத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு , தமிழரசுக் கட்சி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பிலும் ஊடகங்களிலும் , வெளிநாடுகளிலும் அவமரியாதையாகவே பேசி வருகின்றார்.
அத்துடன் எமது தீர்மானங்களுக்கு எதிர்மாறாகவே செயற்பட்டு வருகின்றார். இந்த நிலையில் நாம் அவருக்கு ஒழுக்காற்று கடிதத்தினை அனுப்பிவைத்துள்ளோம். ஆனால் அவருக்கு இன்னும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவில்லை. அவ்வாறு நாங்கள் ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்திருந்தால் வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் பதவியும் இல்லாது போயிருக்கும். மனிதாபிமான எண்ணத்திலேயே நாம் இதுவரை பொறுமை காக்கின்றோம்.
இந்தநிலையில் ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியில் சென்று வேட்பாளருக்கு அனுமதிக்குமாறு கோரியுள்ளார். இதனை ஏற்றுக் கொள்ளமுடியாது. மாகாண சபைக்கான வேட்பாளருக்கான அனுமதியை அனந்திக்கு நான்தான் கொடுத்தேன். எனினும் அவர் எமது கட்சிக்கு ஆதரவாக செயற்படவில்லை. கடந்த காலத்தில் காணாமல் போனவர்களது போராட்டத்தில் கூட சுமந்திரனின் உருவப்பொம்மையும் அவரது வாகனத்தில் இருந்தே எடுக்கப்பட்டு எரிக்கப்பட்டது.
அதனைவிட வெளிநாடுகளில் சென்று அங்குள்ளவர்களுடன் எம்மைப்பற்றி தெரிவிக்கும் கருத்துக்கள் தொடர்பிலும் ஆதாரம் எம்மிடம் உள்ளது. அனந்தியை விட நேர்மையிலும் கட்டுப்பாடுடனும் செயற்படக்கூடிய போரில் பாதிக்கப்பட்ட 17 பேருக்கு மேற்பட்ட பெண்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கு கோரியுள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.