ஐ.நா அறிக்கை வெளிவரமுன் எந்த உள்ளகப் பொறிமுறையையும் அமுல்படுத்தமுடியாது
இலங்கை விவகாரம் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும்வரை எந்தவித உள்ளகப் பொறிமுறையும் முன்னெடுக்கப்பட மாட்டாதென இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அரச தகவல் திணைக்களத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன இதனைத் தெரிவித்தார்.ஜெனீவாவில் எதிர்வரும் செப்டம்பரில் இலங்கை தொடர்பான விசாரணை அறிக்கை வெளிவரவிருக்கிறது.
இந்த நிலையில் அதற்கு முன்னர் உள்ளகப் பொறிமுறை ஒன்று உருவாக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார்.அதன்படி உள்ளகப் பொறிமுறை எப்போது உருவாக்கப்படும் என்று ஊடகவியலாளர்கள் அமைச்சரிடம் வினவினர். அதற்கு பதிலளித்த அவர், குறித்த விசாரணை அறிக்கை வெளிவருவதற்கு முன்னர் எந்தவித பொறிமுறையும் அறிமுகப்படுத்தப்பட மாட்டாதென பதிலளித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜெனீவாவில் சமர்ப்பிக்கப்படும் அறிக்கையில் உள்ளடக்கப்படும் விடயங்களைப் பார்த்த பின்னரே அது குறித்து நடவடிக்கை எடுப்போம். செப்டம்பரில் உள்ளக பொறிமுறையை நடைமுறைப்படுத்துவோம் என்றார்.இதேவேளை உள்ளகப் பொறிமுறை தொடர்பில் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கருத்து வெளியிட்டுவருவது குறித்து விடயங்களை முன்வைத்த ஊடகவியலாளர்கள், இது குறித்து அமைச்சரின் நிலைப்பாட்டை வினவினர்.
இதற்கு பதிலளித்த அவர்,
உள்ளகப் பொறிமுறையை எவ்வாறு பயங்கர நடவடிக்கை எனக் கூறமுடியும்? கடந்த அரசாங்கமே சர்வதேச ஆலோசகர்களை கொண்டுவந்தனர். அத்துடன் தருஸ்டன் தலைமையிலான குழுவுக்கு இணக்கத்தை வெளியிட்டிருந்ததும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கமே. அவர்களே கேட்டு வாங்கிக்கொண்டனர்.
கடந்த அரசாங்கமே இந்த நாட்டை சர்வதேசத்தின் முன்னிலையில் நெருக்கடியை சந்திக்கச் செய்தது – என்றார்