பிரதமர் வேட்பாளராக சமல்! ஜனாதிபதிக்கு ஆலோசனை முன்வைப்பு
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதமர் வேட்பாளராக முன்னாள் ஜனாதி பதி மஹிந்தவை களமிறக்கும் தீர் மானம் இது வரையில் கட்சியில் எடுக்கப்பட வில்லை. கட்சியை இரண்டாக பிளவு படுத்துவதை ஜனாதிபதி விரும்பவில்லை என்று முன்னாள் அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்தார்.
கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் பிளவினை தவிர்க்கும் வகையில் முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக் ஷவை பிரதமர் வேட்பாளராக களமிறக்குமாறு கட் சியின் இணைப்புக் குழுவினர் ஜனாதிபதியிடம் ஆலோசனை முன் வைத்துள் ளனர். இது குறித்து திரை மறைவில் நான்கு மாதங்களாக பேச்சுவார்த்தை நடந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட செய்தியாளர் சந்திப்பு நேற்று கட்சி தலைமையகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே சரத் அமுனுகம மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை பிளவுபடவிடாது ஒன்றிணைந்த கூட்டணியாக கொண்டுசெல்வதையே கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் விருபுகின்றனர். எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தேர்தலில் களமிறங்கும். உறுதியாக இந்த முடிவு கட்சியில் எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகள் ஆகியவற்றுடன் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றோம். கட்சிகள் மத்தியில் மாறுபட்ட கருத்துகள் பல உள்ளன. இடதுசாரிக் கட்சிகள் தமது முடிவுகளை ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ளன.
அதேபோல் முன்னணியில் அங்கம் வகிக்கும் சிறுபான்மைக் கட்சிகள் தமது நிலைப்பாட்டினை முன்வைத்துள்ளன. இதில் சிறுபான்மைக் கட்சிகள் ஒருசில விடயங்களில் முரண்பாடுகளை ஏற்படுத்தியுள்ளன. எனினும் அனைவரது கருத்துகளையும் கவனத்தில் கொண்டு இறுதியில் அனைவரும் இணங்கக் கூடிய வகையில் ஒரு தீர்மானத்தை எடுக்க வேண்டும். கட்சியில் ஒரு சாராருக்காக மட்டுமே தீர்மானங்கள் எடுக்க முடியாது. இதில் ஜனாதிபதி தெளிவாக உள்ளார்.
ஜனாதிபதியுடன் குழு சந்திப்பு
அந்த வகையில் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட எட்டு பேர் கொண்ட கட்சியின் ஒருங்கிணைப்புக்குழுவினர் கடந்த வாரம் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தினோம்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் கட்சியை ஒன்றிணைத்து முன்கொண்டு செல்வது தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்தாலோசித்தோம். இதன்போது எமது தரப்பில் 18 கோரிக்கைகளை நாம் முன்வைத்துள்ளோம். குறிப்பாக எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியாக ஒன்றிணைந்து ஐக்கிய தேசியக் கட்சியை வீழ்த்துவதே எமது பிரதான நோக்கமாகும்.
அதேபோல் பங்காளிக் கட்சிகளை ஒன்றிணைத்து பொதுவான இணக்கப்பாட்டினை எட்டுவது, இதன்போது ஜாதிக ஹெல உறுமய போன்ற முக்கிய பங்காளிக் கட்சிகள் எம்முடன் இணைந்து களமிறங்க இணக்கம் தெரிவித்துள்ளன. அதேபோல் சிறுபான்மைக் கட்சிகளின் ஆதரவை பெற்று வடக்கு கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளில் சிறுபான்மைக் வாக்குளை பலப்படுத்துவது உள்ளிட்ட பல யோசனைகளை நாம் முன்வைத்துள்ளோம்.
மேலும் கட்சிக்குள் இரண்டு தரப்பாக பிரிந்து செயற்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இது கட்சியின் ஒற்றுமையை சிதைவடைக்கும் செயற்பாடாகும். ஆகவே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை பலப்படுத்தவும், கட்சியை ஒற்றுமைப்படுத்தவும் சரியான தீர்மானங்களை முன்னெடுக்க வேண்டும் என்ற முக்கிய தீர்மானத்தை நாம் முன்வைத்துள்ளோம்.
அதற்கமைய முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக் ஷவை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி கட்சியை ஒன்றிணைக்க நாம் ஒரு ஆலோசனையை முன்வைத்துள்ளோம். இரண்டு குழுவினரையும் ஒன்றிணைக்கும் ஒரே தீர்மானம் இதுவாகவே இருக்கும் என நாம் நம்புகின்றோம்.
கேள்வி :-பிரதமர் வேட்பாளராக சமல் ராஜபக் ஷவை நியமிக்கும் தீர்மானம் கட்சியில் எடுக்கப்பட்டுள்ளதா ?
பதில்: கட்சி இதுவரையில் யாரை பிரதமர் வேட்பாளராக களமிறக்குவது என்ற தீர்மானத்தை எடுக்கவில்லை. சமல் ராஜபக் ஷவின் பெயரையும் ஒரு ஆலோசனையாக முன்வைத்துள்ளோம். நேற்று மஹிந்த தனது விருப்பத்தை தெரிவித்தார். அது அவரது விருப்பம் மட்டுமேயாகும். அவ்வாறு பலர் தமது கருத்துக்களை முன்வைத்துள்ளனர். அதை கட்சியின் இறுதி முடிவாக எடுக்க முடியாது. இதில் நிமல் சிறிபால டி சில்வாவின் பெயரும் உள்ளது. எனினும் நேற்று முன்தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் சமல் ராஜபக் ஷவுக்கு இடையில் முக்கிய பேச்சுவார்த்தை ஒன்று நடைபெற்றது. இதன்போது முக்கிய இணக்கப்பாடுகள் சில எட்டப்பட்டுள்ளன.
கட்சியை ஒன்றிணைப்பது தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்துவதால் கட்சியின் அனைவரது நம்பிக்கையையும் பெற்ற, அனைவராலும் ஏற்றுக்கொள்ளப் பட்ட நபர் என்ற வகையில் சமலின் பெயருக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் திரை மறைவில் நான்கு மாதங்களாக நாம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம்.
கேள்வி :-மஹிந்தவை களமிறக்கும் எண்ணம் இல்லாவிட்டால் கட்சிக்குள் பிளவு ஏற்படாதா?
பதில்: முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை களமிறக்க எந்த சந்தர்ப்பத்திலும் தீர்மானம் எடுக்கவில்லை. நேற்று மெதமுலனையில் மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்திருந்த கருத்துக்கள் அவரது விருப்பமேயாகும்.
கட்சிக்கு வெளியில் பலர் பல கருத்துக்களை முன்வைக்கலாம். ஆனால் அவை கட்சியின் தீர்மானமாக அமையாது. மஹிந்த ராஜபக் ஷவை கட்சியின் பிரதமர் வேட்பாளராக களமிறக்குவது தொடர்பில் கட்சிக்குள் இணைக்கப்பாடு எட்டப்படவில்லை. அதேபோல் மஹிந்தவும் தன்னை பிரதமர் வேட்பாளராக களமிறக்க கோரி கட்சியிடம் விண்ணப்பிக்கவில்லை.
அதனை கட்சிக்குள் மஹிந்த ஆதரவு கூட்டணியின் கருத்தாகவே இன்னும் நோக்குகின்றோம். எது எவ்வாறு இருந்தாலும் கட்சியின் மத்திய குழுக்கூடி கட்சியின் தலைவர் இறுதி முடிவகளை அறிவிப்பார். அவரின் முடிவே கட்சியின் இறுதி முடிவாக அமையும் என்றார்.