ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து 80 கண்காணிப்பாளர்கள்: யாழ்ப்பாணத்துக்கும் சென்றார்கள்
ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் புதனன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து யாழ் அரச அதிபர், உதவித் தேர்தல் ஆணையாளர், பிரதி வடமாகாண முதலமைச்சர் குருகுலராஜா உள்ளிட்ட பலரையும் சந்தித்தார்கள்.
இந்த தேர்தல் கண்காணிப்புக் குழுவின் தலைவருடன் இரண்டு முக்கிய உறுப்பினர்களும் யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ளனர்.யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த இந்தக் குழுவின் தலைவரும் ரொமேனிய நாட்டைச் சேர்ந்தவருமான கிறிஸ்டியல் வ்ரெடா, இலங்கை அரசியலில் யாழ்ப்பாணம் மிகவும் முக்கிய இடத்தை வகிப்பதனால் கொழும்பு வந்து பிரதமரைச் சந்தித்ததும் உடனடியாகவே புதனன்று யாழ்ப்பாணத்திற்கு வந்ததாகக் கூறினார்.
தேர்தல் கண்காணிப்பின் பின்னர் சுமார் 200 பக்கங்களைக் கொண்ட அறிக்கையொன்றை தாங்கள் சமர்ப்பிக்கவுள்ளதாகவும், அதில் தாங்கள் அவதானித்த அனைத்து விஷயங்களோடு, தங்களின் பரிந்துரைகளும் உள்ளடக்கப்பட்டிருக்கும் என்றும் அவர் யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தேர்தலின்போது, சட்டரீதியான செயற்பாடுகள், ஊடகச் செயற்பாடுகள், தேர்தல் ஒழுங்குமுறைகள், தேர்தல் பரப்புரை நடவடிக்கைள் என தேர்தல் தொடர்பான பலதரப்பட்ட அம்சங்களையும் தாங்கள் கண்காணிக்கவுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், செவ்வாயன்று கொழும்பில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனையும் சந்தித்துப் பேசியதாகக்கூறினார்.
தனித்துவமான தேர்தல் கண்காணிப்பு முறைகள் காரணமாக, உலக அளவில் மதிக்கப்படும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் எண்பதுக்கும் மேற்பட்டவர்கள் இலங்கையின் ஆகஸ்ட் மாத நாடாளுமன்றத் தேர்தலைக் கண்காணிக்க வந்துள்ளதானது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.