ஜனநாயகம் குறித்துப் போதிக்க வரவில்லை – ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்புக் குழு
தாம் இலங்கை வந்திருப்பது, தேர்தலைக் கண்காணிக்கவே தவிர, ஜனநாயகம் பற்றி போதிப்பதற்காக அல்ல என்று நாடாளுமன்றத் தேர்தலைக் கண்காணிக்க வந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு குழுவின் தலைவர் கிறிஸ்டியன் பிரேடா தெரிவித்துள்ளார்.
நேற்று கண்காணிப்பு பணியைத் தொடங்கியுள்ள ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக் குழுவின் தலைவர் கிறிஸ்டியன் பிரேடா, கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசுகையில், நாம் ஜனநாயகம் குறித்தோ, தேர்தல் நடைமுறைகள் குறித்தோ போதனை செய்வதற்காக இங்கு வரவில்லை.
நாம் பல்வேறு நிபுணத்துவம் பெற்றவர்களுடன் இணைந்து தேர்தலைக் கண்காணிக்கவே இங்கு வந்துள்ளோம். ஜனநாயக நடைமுறைகளை வலுப்படுத்தும் இலங்கை அதிகாரிகள் மற்றும் சிவில் சமூகத்தின் முயற்சிகளுக்கு நாமும் பங்களிப்புச் செய்கிறோம். கண்காணிப்புக் குழு உறுப்பினர்கள் நடுநிலையோடு செயற்படுவர் இலங்கையின் தேர்தல் சட்டங்களுக்கு அமையவும், ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு நெறிமுறைகளின்படியும் நடந்து கொள்வர்.
தேர்தல் முடிந்த சற்று நேரத்தில் ஒரு ஆரம்பக்கட்ட அறிக்கையையும், இறுதி அறிக்கையை பின்னரும் வெளியிடுவோம்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கை தேர்தல்கள் ஆணையாளரின் அழைப்பை ஏற்று, ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் ருமேனிய உறுப்பினர் கிறிஸ்ரியன் பரேடா தலைமையிலான 70 பேர் கொண்ட கண்காணிப்புக் குழுவை ஐரோப்பிய ஒன்றியம் அனுப்பி வைக்கிறது.