இராணுவ முகாம்களுள்ள காணிகளை அடையாளப்படுத்த நடவடிக்கையாம்: சுவாமிநாதன்
கிளிநொச்சி மாவட்டத்தில் மக்களுடைய காணிகளில் உள்ள இராணுவ முகாம்களை அடையாளம் காண்பதற்காக அந்தந்தப் பிரதேச செயலகங்களில் மூவர் கொண்ட குழுக்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளன.
பிரதேச செயலாளர்கள், அலுவலர்களை உள்ளடக்கிய இந்தக் குழுக்கள் தமது பணியை இன்று ஆரம்பிக்கும் என்ற அறிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நேற்று நடைபெற்ற மீள்குடியமர்வு தொடர்பான கலந்துரையாடலில் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கிளிநொச்சி மாவட்டத்தில் இன்னும் 807 குடும்பங்களே மீள்குடியேற்றப்பட வேண்டி உள்ளன என்று அதிகாரிகள் கூட்டத்தில் தெரிவித்தனர். அந்த மக்களுடைய காணிகளில் இராணுவ முகாம்கள் இருக்கின்றன.அல்லது கண்ணிவெடிகள் அகற்றப்படாமல் உள்ளன.
ஹலோ ரஸ்ட் நிறுவனத்தினரிடம் போதிய நிதி வசதி இல்லாததன் காரணமாக கண்ணிவெடிகளை அகற்றும் பணிகள் விரைவாக நடைபெறவில்லை.நிதி உதவிகளைப் பெறுவதன் மூலம் இந்தப் பிரச்சினையைத் தீர்ப்போம்.
இராணுவ முகாம்கள் உள்ள காணிகளை உடனடியாக அடையாளப்படுத்துமாறு கூறியிருக்கிறேன்.அதற்கு படையினரும் சம்மதித்திருந்தார்கள் அதனடிப்படையில் நாளைய தினம் படையினர் வசமுள்ள காணிகளை பிரதேச செயலாளர்,அலுவலர்கள்,இராணுவ அதிகாரிகள் கொண்ட குழு தாம் அடையாளப்படுத்திய இடங்களை அடையாளம் கண்டு,அதைக் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபரிடம் இன்னும் ஒரு மாதத்தினுள் கையளிப்பார்கள்.அதன் பின்னர் உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.