"உதிரிகளைத் தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும்": சம்பந்தன்
இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் உதிரிக் கட்சிகளை தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் விடுதலைப் புலிகளின் கட்சி மற்றும் ஆனந்தி சசிதரனுக்கும் இது பொருந்தலாம் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
இலங்கையில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கூடுதலான உறுப்பினர்களை பெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். வெள்ளிக்கிழமையன்று, திருகோணமலை மாவட்டத்திற்கான வேட்பு மனுவை தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.
தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிராக இந்த தேர்தலில் போட்டியிடும் கட்சிகள், சுயேட்சைக் குழுக்கள் தொடர்பாக கருத்துத் தெரிவித்த அவர், உதிரிகளைத் தமிழ் மக்கள் முற்றாக நிராகரிக்க வேண்டும் என்றார். ஜனநாயக விடுதலைப் போராளிகளாக போட்டியிடும் முன்னாள் விடுதலைப் புலிகள் மற்றும் சுயேட்சையாக போட்டியிடப் போவதாக அறிவித்துள்ள வட மாகாண சபை உறுப்பினரான அனந்தி சசிதரனுக்கும் இது பொருந்தலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தலில் போட்டியிட வேண்டுமென தங்களை சந்தித்த முன்னாள் விடுதலைப்புலிகள், தமிழ் மக்களின் எதிர்காலம் மற்றும் உடனடித் தேவைகள் பற்றிய உறுதிப்பாட்டை கொண்டிருக்கவில்லை என்றும் தேர்தலில் போட்டியிட வேண்டுமென்ற உறுதிப்பாடு மட்டுமே அவர்களிடம் இருந்தது என்றும் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.