பிராந்திய அதிகாரங்கள் தீர்வில் அங்கீகரிக்கப்படவேண்டும்! கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்
பண்டா – செல்வா மற்றும் டட்லி – செல்வா ஒப்பந்தத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிராந்திய அதிகாரங்கள் தமிழ் மக்களுக்கென உருவாக்கப்படும் அரசியல் தீர்வில் அங்கீகரிக்கப்படவேண்டும். தீர்வு ஒளிவு மறைவின்றி கொண்டுவரப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை தமிழர் அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கத்தோலிக்க திருச்சபையினால் திருகோணமலை மறை மாவட்ட புதிய ஆயராக நியமிக்கப்பட்டிருக்கும் நோயல் இம்மானுவேலுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு வைபத்தில் பிரதம அதிதியாக கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே சம்மந்தன் மேற்கண்டவாறு கூறனார்.
கடந்த ஞாயிறு காலை உப்புவெளி சர்வோதய கேட்போர் கூடத்தில் சிரேஷ்ட ஊடகவியலாளர் திருமலை நவம் தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் சம்பந்தன் தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது,
தமிழ் மக்களுக்கான தீர்வொன்று விரைவில் கொண்டுவரப்பட வேண்டும். அது ஒழிவு மறைவு அற்ற தீர்வாக இருக்க வேண்டும். பெரும்பான்மை சிங்கள மக்கள் அங்கீகரித்ததாகவும் தமிழ் மக்கள் ஏற்றுக்கொண்டதாகவும் அத்தீர்வு அமைய வேண்டும். பண்டா செல்வா ஒப்பந்தம் மற்றும் டட்லி செல்வா ஒப்பந்தம் ஆகியவற்றில் பிராந்திய ரீதியான அதிகாரங்ளுக்கும் உரிமைகளுக்கும் முக்கியத்தும் அளிக்கப்பட்டிருந்தது. புதிய பாராளுமன்றமொன்று உருவாகிய கையுடன் தமிழ் மக்களுக்கான தீர்வு முன் வைக்கப்பட வேண்டும். அத்தீர்வில் மேற்படி விடயங்கள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமென நாம் எதிர்பார்க்கின்றோம்.
மக்களுடைய துன்ப துயரங்களைஅவர்களுடைய தேவைகளை அபிலாஷைகள் சம்மந்தமாக அரசியல் வாதிகளாகிய நாம் சிலக்கருத்துக்களை கூறுகின்றபோது அதை தனிப்பட்ட அரசியல் என்று நீங்கள் நினைத்துவிடக்கூடாது. மக்களுடைய கஷ்ட நஷ்டங்களை எல்லோரும் புரிந்துக்கொள்ள வேண்டும். புரிந்து கொண்டால்தான் அவர்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண நாம் எல்லோரும் ஒற்றுமையாக உழைக்க முடியும்.
30 வருட காலமாக கொடூரமான யுத்தத்துக்கு ஆளாகி அந்த யுத்தம் காரணமாக எமது மக்கள் சொல்லொண்ணா துன்பங்களுக்கும் கஷ்டங்களுக்கும் உள்ளாகி அதிலிருந்து முழுமையாக விடுபடாமல் உள்ள அந்த மக்களின் உரிமைகள் அபிலாஷைகள் சம்மந்தமாகவும் அவர்கள் எதிர்காலம் எப்படி அமைய வேண்டும். அமைவதற்கு என்னவிதமான வாய்ப்புக்கள் உள்ளன என்பது பற்றி சிந்திக்க வேண்டியது எமது கடமையாகும்.
நாடொன்றின் முழுமையான ஆட்சி ஒழுங்குக்கு அடிப்படையானது ஜனநாயகமாகும். ஜனநாயகம் சிறப்பாக இருந்தால் தான் நாட்டில் ஆட்சியதிகாரம் உயர்ந்து காணப்படும். மக்கள் தான் எஜமான்கள் ஆட்சியாளர்களல்லர். இறைமை ஆட்சி அதிகாரம் மக்களுக்கு உரியது. ஆட்சிபுரிபவர்களுக்கு அது சொந்தமானதல்ல.
சட்டத்தை ஆக்குகின்ற நிர்வகிக்கின்ற பிணக்கு ஏற்படின் நீதியின் அடிப்படையில் தீர்க்கும் அதிகாரம் மக்களிடமே இருக்க வேண்டும். மக்களே அதிகாரங்கள் அனைத்தையும் தமது நேரடிப்பிரதி நிதிகளான ஜனாதிபதி, பிரதம மந்திரி, அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற பிரதிநிதிகளிடம் ஒப்படைக்கின்றார்கள். எனவேதான் இறைமையும் ஆட்சி அதிகாரமும் மக்களுக்குரியது என்று கூறுகின்றோம். எல்லாவற்றுக்கும் ஜனநாயகமே அடிப்படையானது.
மக்கள் தமது ஜனநாயக உரிமையான வாக்குகளின் மூலமாக பாராளுமன்றம் எவ்விதம் இயங்க வேண்டும். ஜனாதிபதியும் பிரதமரும் எவ்விதம் நடந்து கொள்ள வேண்டும். அரசு யந்திரம் எவ்வாறு இயங்க வேண்டும் என தமது வாக்கின் மூலமாக மக்கள் தீர்மானித்து கொள்கின்றார்கள். இதுவே மக்கள் இறைமை. இதை மக்கள் சரியாக புரிந்துக் கொண்டால்தான் தமது வாக்குப்பலத்தை முறையாக பயன்படுத்த முடியும்.
இவ்வருடம் ஜனவரி மாதம் 8ம் திகதி எமது மக்கள் யாரும் எதிர்பார்க்காத புரட்சிகரமான முடிவை எடுத்தார்கள். தமது வாக்குப்பலத்தால் புதிய ஆட்சி மாற்றத்தையே உண்டாக்கினார்கள். எல்லோருக்கும் ஒரு அபிப்பிராயமிருக்கின்றது. இந்த மாற்றத்தை சிறுபான்மை மக்கள் தான் செய்தார்களென்று 75 வீதமான பெரும்பான்மை மக்கள் இம்மாற்றத்துக்கான பின்னணியாக இருந்துள்ளார்கள். சர்வாதிகாரப் போக்கில் போய் கொண்டிருந்த நிலையில் ஜனநாயகம் குழித்தோண்டி புதைக்கப்பட்டிருந்தது. பாராளுமன்றம் செல்லாக்காசாகியது. எதிர்கட்சியினர் விரும்பியதன் பிரகாரம் ஆளும் கட்சியுடன் இணையக்கூடிய சீரழிவு ஏற்பட்டது.
உயர்நீதிமன்றம் உச்சநீதிமன்றங்கள் சுதந்திரமாக செயற்பட முடியாமல் செல்வாக்குகளுக்கு ஆளாக்கப்பட்ட நிலைமை காணப்பட்டது. ஆணைக்குழுக்களின் சுதந்திரங்கள் பறிக்கப்பட்டிருந்தது இவற்றையெல்லாம் மாற்றியமைத்தது மக்களின் புள்ளடியாகும். இப்பொழுது புதிய ஜனாதிபதி பதவியேற்றுள்ளார். மனசாட்சிக்கு விரோதமாக அவர் செயற்பட மாட்டார் என்பது எனது கணிப்பு. ஜனாதிபதி அவர்களுடன் பலமுறை சந்தித்து உரையாடியுள்ளோம். அண்மையிலும் த.தே.கூட்டணியினர் சந்தித்தோம்.
தமிழ் மக்களுடைய பிரச்சினை ஒரு தொடர்கதையாக இருக்க முடியாது. முடிவு காணப்பட வேண்டுமென்ற கருத்தை அவரிடம் தெளிவாக கூறியுள்ளோம். எமது தனித்துவமும் பாரம்பரியமும் பாதுகாக்கப்பட வேண்டும். எனவே நாட்டை பிளவுப்படுத்தாத முறையில் பிரிவு காணா வகையில் ஒருமித்த நாட்டுக்குள் சமவுரிமையுடன் தமிழ் மக்கள் வாழக்கூடிய சூழ்நிலை உருவாக்கப்படவேண்டும். இது எமது அடிப்படையினதும் பிறப்பு சார்ந்த உரிமையென ஜனாதிபதியிடம் எடுத்துக்கூறியுள்ளார்.
வடகிழக்கின் மொழி ரீதியான கலாசார ரீதியான பண்புகளை பாதுகாக்கும் உரிமை தமிழ் மக்களுக்கு உண்டு. சரித்திர ரீதியாக நாம் அதைப்பேணி பாதுகாத்து வந்துள்ளோமென்பது வரலாற்று ரீதியாக நிரூபிக்கப்பட்ட உண்மை. இவ்வுரிமைகளை அங்கீகரித்துத்தான் பண்டா - செல்வா ஒப்பந்தம் டட்லி- செல்வா ஒப்பந்தம் ஆகியன உருவாக்கப்பட்டன.
ஏற்படுகின்ற அரசியல் தீர்வில் அது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். நாடு பிரிக்கப்படாமல் இருப்பதாக இருந்தால் அதை நாம் முழுமையாக ஏற்றுக்கொள்ளத்தயாராக இருக்கின்றோம். நாமும் பிரிக்கப்படக்கூடாது. அதேவேளை தமிழ் மக்கள் ஒருமித்து ஒற்றுமையாக சேர்ந்து தமது அபிலாஷைகளை நிறைவேற்றக்கூடிய உரிமை வழங்கப்பட வேண்டும். மிக உயர்ந்த உச்சமான அளவுக்கு அதிகாரம் தமிழ் மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டுமென ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளோம்.
சில அதிகாரங்களை பொறுத்தவரை அரசாங்கம் முக்கியமானவற்றை தன்னுடன் வைத்துக்கொண்டாலும் பொருளாதார விடயங்களை பொறுத்தவரை கலாசாரம் அரசியல் விவகாரங்களை பொறுத்தவரையில் மக்கள் தமது அபிலாசைகளை நிறைவேற்றும் அதிகாரம் மக்களின் கையில் இருக்க வேண்டும். பிராந்திய ரீதியாக மாகாண ரீதியாக அவை ஒப்படைக்கப்பட வேண்டும்.
தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வை வழங்க அரசாங்கம் முற்படும் வேளையில் அதை சிங்கள மக்களுக்கு மூடி மறைத்து ரகசியம் பேணும் தீர்வாக இருக்க கூடாது. வெளிப்படையாக எல்லோருக்கும் தெரியப்படுத்தப்பட்ட தீர்வாக இருக்க வேண்டும். தீர்வின் உண்மை நிலைமை சிங்கள மக்களுக்கு தெளிவுப்படுத்தப்பட வேண்டும்.
குறிப்பாக கூறப்போனால் எல்லா மக்களும் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். இத்தகைய தீர்வே நிரந்தர தீர்வாக இருக்க முடியும். இது விடயம் குறித்து ஜனாதிபதியுடன் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையார் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகிய அனைவருடனும் கலந்துரையாடியுள்ளோம். இதை முறையாக கையாள அவர்கள் ஆர்வம் கொண்டுள்ளார்கள் என்பதும் உண்மையே.
விரைவில் வெளியிடவுள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் மக்களுக்கான நிரந்தர தீர்வு எவ்வாறு இருக்க வேண்டுமென்பதை தெளிவாகவும் உறுதியாகவும் கூறுவோம். அவர்களுடைய தேர்தல் விஞ்ஞாபனத்திலும் இது விடயமாக குறிப்பிட வேண்டுமென நாம் எதிர்பார்க்கின்றோம். கேட்டிருக்கின்றோம். எனவேதான் எதிர்வரும் தேர்தலில் எமது மக்கள் புள்ளடி இடுவதன் மூலம் எடுக்கப்போகும் முடிவானது பெரும் ஆயுதமாக மாறும் என்பதில் எவ்விதமான சந்தேகமுமில்லை. சர்வதேச அளவில் முன் எப்பொழுதும் இல்லாத அளவுக்கு எமது உரிமை போராட்டம் முக்கியப்படுத்தப்பட்டு பேசப்பட்டு வருகின்றது. செப்டம்பரில் வரவுள்ள மனித உரிமை ஆணைக்குழுவின் அறிக்கையானது பல காத்திரமான விடயங்களை எடுத்துக் கூறுமென நம்புகின்றோம்.
தமிழ் மக்கள் குறிப்பாக வடகிழக்கு மக்கள் நடைபெறவுள்ள தேர்தலில் தமது இலக்கை நிரூபிக்கும் வண்ணம் வாக்களிக்க வேண்டும். ஊர்ஜிதப்படுத்த வேண்டும். நிரூபித்தால் அது பெரும் பலத்தை எமக்குத்தரும். இதையுணர்ந்து மக்கள் செயல்பட வேண்டும். மக்கள் தமது பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் சுவடுகளாக பிராந்திய அதிகாரங்கள் வலுப்படுத்தப்படவேண்டும்.
பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். தற்போதைய அரசியல் சூழ்நிலை எமக்கு சாதகமானது. இதை நாம் முழுமையாக கையாள வேண்டும். பயன்படுத்த வேண்டும். திருகோணமலை மாவட்டத்தை பொறுத்தவரை நாம் இக்கட்டான காலக்கட்டத்தில் இருக்கின்றோம். வடபுலம் பற்றி நாம் கவலை கொள்ளத் தேவையில்லை. அங்கு மக்கள் பெரும்பான்மை உடையவர்களாக காணப்படுகின்றார்கள். இதுபோன்றே மட்டக்களப்பு மாவட்டமாகும்.
திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் மக்களுடைய விகிதாசாரம் மிக வேகமாக வீழ்ச்சியை கண்டுள்ளது. 1881 இல் 4 வீதமாக இருந்த சிங்கள மக்களின் விகிதாசாரம் இன்று மிகக்கூடியளவு பெருக்கம் அடைந்துள்ளது. பண்டா - செல்வா ஒப்பந்த காலத்தில் 13 வீதமாகவும் டட்லி -செல்வா ஒப்பந்த காலத்தில் (1965) 19 வீதமாக உயர்ந்தது.
ஆகையால் தீர்க்கதரிசனத்துடன் எமது மக்களை பலப்படுத்த வேண்டும். வெளிநாடுகளிலும் பிற இடங்களிலும் வாழும் எமது மக்கள் மீண்டும் இப்பிரதேசத்துக்கு திரும்பிவர வேண்டும். அவர்கள் தமது சொந்த இடங்களில் சுதந்திரமாக வாழக்கூடிய காப்பு நிலையும் ஏனைய வளநிலையும் உருவாக்கப்பட வேண்டும்.
எனவே தற்பொழுது கையில் உள்ள சூழ் நிலையைப் பயன்படுத்தி எமது பிரதேசத்தையும் மக்களையும் பலப்படுத்த வேண்டும். இது எமக்கொரு சவாலாக இருந்த போதிலும் இக்கடமையை தவறாது நாம் செய்து முடிக்க வேண்டும்.
இவ்வாறான ஒரு சூழ்நிலையில் தான் திருகோணமலை மறை மாவட்ட ஆயராக நோயல் இம்மானுவேல் அவர்கள் மறை மாவட்ட ஆயராக நியமிக்கப்பட்டிருக்கின்றார். மிக முக்கியமான காலக்கட்டத்தில் இப்பதவியை அவர் ஏற்றுள்ளார். அவருடைய உதவியும் எமக்கு தேவையாக மாறும். நாம் எல்லோரும் சேர்ந்து இம்மாவட்டத்தின் வளர்ச்சிக்கும் உயர்ச்சிக்கும் மாற்றத்துக்கும் உழைப்போமெனக் கூறுவோம் என சம்பந்தன் தெரிவித்தார்.