மன்னார் புதைகுழி எலும்புக்கூடுகளின் பகுப்பாய்வை நிறுத்தக்கோரி சி.ஐ.டியினர் அறிக்கை சமர்ப்பிப்பு
மன்னார் திருக்கேதீஸ்வர பகுதியில் கண்டுபிடிக்கப் பட்ட எலும்புக் கூடுகளை மேலதிக பகுப்பா ய்வு செய்து அறிக்கைகளை மன்றில் சமர்ப்பிப்பதற்கு சுமார் 27 ஆயிரம் அமெரிக்க டொலர் தேவைப் படுவதால் அதை நிறுத்திவைக்குமாறு கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினர் மன்றில் தெரிவித்தனர்.
கடந்த 2013 ஆண்டு மன்னார் திருக்கேதீஸ்வரத்தில் இருந்து குடிதண்ணீர் வழங்குவதற்காக வீதி ஓரத்தில் குழாய் பதிப்பதற்காக குழி வெட்டிப்பட்டபோது மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதை தொடர்ந்து முன்னாள் மன்னார் நீதிபதி ஆனந்தி கனகரெட்ணம் முன்னிலையில் சட்டவைத்திய அதிகாரி வைத்தியரெட்ண தலைமையில் அகழ்வு பணி இடம்பெற்போது 83 மனித மண்டை ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டு பகுப்பாய்விற்கு அனுப்பபட்டிருந்ததுடன் அகழ்வு பணி இடைநிறுத்தப்பட்டிருந்தது.
இதை தொடர்ந்து அங்கிருக்கும் கிணற்றிலும் வேறு இடங்களிலும் காணாமல்போனவர்களின் எச்சங்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் காணமல்போனோர் சார்பாக மன்னார் நீதிவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு இன்று வியாழக்கிழமை மன்னார் மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஆசீர்வாதம் கிறேசியன் அலெக்ஸ்ராஜா முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது காணாமல் போனோர் சார்பாக சிரேஷ்ட சட்டத்தரணி வீ.எஸ்.நிரஞ்சன் தலைமையில் சட்டத்தரணிகள், எம்.எம்.சபூர்தீன், திருமதி. ரணித்தா ஞானராஜா, ஜெபநேசன் லோகூ ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர்.
ஏற்கவே கண்டுபிடிக்கப்பட்ட 83 மனித மண்டை ஓடுகள் சம்பந்தமாகவும் களனி பல்கலைகழகத்துக்கு பகுப்பாய்வு செய்வதற்கு அனுப்பபட்ட அறிக்கைகள் சம்பந்தமாக மேலதிக அறிக்கைகள் பெறவேண்டி இருப்பதாகவும் அமெரிக்க சிவில் பல்கலைகழகத்தில் இருந்து அறிக்கைகள் பெற்று கொள்வதற்காக 27 ஆயிரம் அமெரிக்க டொலர் தேவைப்படுவதாகவும் இதனால் இதனை நிறுத்திவைப்பது நல்லது என குற்ற புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்பித்தனர்.
குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் - இதுவரைக்கும் தங்களுக்கு பொதுமக்களிடம் இருந்து காணாமல்போனவர்கள் தொடர்பாக எவ்வித முறைப்பாடுகளும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது. குற்றவியல் பிரிவினருக்கோ பொலிஸாருக்கோ முறையிடவில்லை என அவர்கள் மேலும் தெரிவித்தனர். ஆகவே முறைப்பாடுகள் எதுவும் தமக்குக் கிடைக்கபெறாததினால் மீள் அகழ்வை நிறுத்திவைப்பதே உசிதம் என தெரிவித்தனர்.
இதேநேரத்தில் காணாமல்போனோர் சார்பாக சட்டத்தரணிகள் வீ.எஸ்.நிரஞ்சன் தனது சட்டவாதத்தை முன்வைக்கையில் - நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மன்னார் நில அளவை படத்தில் 128வது பகுதியில் ஏற்கனவே கல்கிணறும் கூட்டுறவு சங்க களஞ்சியமும் பயணிகள் தங்குமிடமும் இருந்தன என சுட்டிகாட்டப்படுகிறது. அத்துடன் அங்கு ஒரு பெரிய கிணறும் இருந்ததாகவும் சுட்டிகாட்டப்படுகிறது. இந்த இடத்தில் மயானம் ஒன்று இருந்திருந்தால் 1970ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட வரைபடத்தில் இந்த மயானம் சுட்டிகாட்டப்பட்டிருக்கும்.
ஆகவே இந்த வரை படத்தில் மயானம் சுட்டிகாட்டப்படாததினால் இங்கு மயானம் இருந்திருக்காது என நாங்கள் நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டுவருகிறோம். ஆகவே இதனை ஏற்கனவே தீர்மானித்ததன்படி பொது தேர்தலுக்கு பின்பு அகழ்வுப் பணியை மீண்டும் தொடங்குமாறும் இது சம்பந்தமான கட்டளையை ஓகஸ்ட் மாதம் வழங்குமாறும் மீள் அகழ்வுசெய்ய உத்தரவு இடுமாறும் மன்றிடம் வேண்டி நிற்கிறோம். - என்றார்.
அதே நேரத்தில் காணாமல்போனவர்கள் தொடர்பாக முன்னிலையாகிய சட்டத்தரணிகள் தங்கள் வாதத்தை தொடர்ந்து முன்வைக்ககையில் - அப்பிரதேசம் ஏற்கனவே பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தபட்டு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபருக்கும் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கும் அறிவிக்கபட்டிருந்தது.
ஆனால் இப்போழுது இது தளர்ந்த நிலையில் காணப்படுவதனால் இந்த இடத்தில் மீண்டும் பொலிஸ் சாவடி அமைத்து இப்பகுதி பாதுகாக்கபடவேண்டும் என நீதிமன்றத்தில் கோரிக்கை விடப்பட்டிருந்தது. இந்த அறிவித்தல் அடுத்த தவணையில் நிலை நாட்டப்படும் என நம்புகின்றோம் என சட்டத்தரணி தெரிவித்தார். இதனை அடுத்து மன்னார் மாவட்ட நீதிவான் இந்த வழக்கை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 5 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.