வடக்கு,கிழக்கு மக்களுக்கு தீர்வு கிட்ட உலகத் தமிழர்களே அணி திரளுங்கள் : வடக்கு முதல்வர்
இலங்கையின் வடக்கு -கிழக்கு மக்களுக்கு உசிதமான ஒரு தீர்வு உருவாக உலகத்தமிழர்கள் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என்று அமெரிக்காவில் அறைகூவல் விடுத்துள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரன்.
ஓர் இனத்கை; குறிவைத்து இனப்படுகொலை நடைபெறும்போது அதற்கு எதிர்த்தாக்குதல் அந்த இனத்தினால் நடத்தப்பட்டால்,இனப்படுகொலையில் ஈடுபட்ட இனம்தான் அதற்கும் பொறுப்புக்கூற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். தமிழ் இளைஞர்கள் ஆயுதம் தூக்குவதற்கு ,சிங்கள அரசும்,இராணுவத்தினருமே காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வடக்கு மாகாண முதலமைச்சர் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
அங்கு அவர் பிரதிநிதிகளையும் சந்தித்துப் பேச்சு நடத்தி வருகின்றார்.பல்வேறு நிகழ்வுகளிலும் பங்கேற்று வருகின்றார். அமெரிக்காவில் வாழும் தமிழ் மக்களால் கடந்த 7ஆம் திகதி இரவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் முதன்மை விருந்தினராகப் பங்கேற்று உரையாற்றினார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், வெள்ளையர்களிடமிருந்து சுதந்திரத்தைப் பெறுவதற்காக போராட்டம் நடத்தப்பட்டது. இந்திய தேசத்தின் தென்பகுதியும் இதனூடாக சுதந்திரத்தை பெற்றுக்கொண்டது.
சுதந்திரம் கிடைத்த பின்னர் தென்பாரதத்தில் நடந்தது சமூக சிக்கல். தமிழ் பேசும் மக்களிடையே திராவிடம்-ஆரியம் என்ற மோதல் தோன்றியது. ஆனாலும் இந்தியாவில் தம்மை தாமே ஆழுவதற்கு ஒவ்வொரு தொகுதியினருக்கும் போதியளவு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் எமது நாட்டில் அப்படியல்ல. இதைத்தான் அண்மையில் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்த இந்திய பிரதமர் மோடியிடம் தெரிவித்திருந்தேன். தென்பாரதம் சமூக சிக்கலிருந்து மீள்கின்றது.
இதனால் பொருளாதார கல்வி கலாசார ரீதியாக அபிவிருத்தி கண்டுள்ளது. ஆனால் இலங்கையின் வடக்கு கிழக்கு அப்படியல்ல. வடக்கு கிழக்கில் எமக்கு நேர்ந்தது சமூக சிக்கல் இல்லை. இன்படுகொலை. இதைத்தான் அண்மையில் வடக்கு மாகாண சபையில் ஆவணமாக கொண்டு வந்து தீர்மாணமாக நிறைவேற்றினோம்.
எமது நாட்டில் தமிழர் நலன் பேண வேண்டுமாக இருந்தால் வடக்கு கிழக்கு மக்களுக்கு சுயாட்சி பெற்றுக் கொடுத்தல் அவசியம். இலங்கையின் இரு இனங்களினதும் புத்திஜீவிகள் சமஸ்டி தான் தீர்வு என்பதை உணர்கிறார்கள். என நான் நம்புகிறேன். வடக்கு கிழக்கு மக்களுக்கு உசிதமான தீர்வு உருவாக உலகத் தமிழர்கள் ஓரணியில் திரள வேண்டும் என்றார்.