Breaking News

பிடிபட்ட வெள்ளை வான் யாழ்ப்பாணத்திலிருந்து கடத்திவரப்பட்டது? விசாரணையில் தகவல்

மிரிஹான பொலிஸாரால் கடந்த திங்கட்கிழமை இரவு 7.30 மணியளவில் கைப்பற்றப்பட்ட வெள்ளை வான் இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவின் பாதுகாப்புக்காகப் பயன்படுத்தப்பட்ட வான் எனத் தெரியவந்துள்ளது.

இந்த வான் யாழ்ப்பாணத்திலிருந்து கடத்திவரப்பட்டது என மிரிஹான பொலிஸாரின் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது. 9244 என்ற பதிவிலக்கத்தைக் கொண்ட இந்த வான் கொட்டாஞ்சேனை அல்விஸ் பிளேஸிலில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு சொந்தமானது. 2004 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி முதல் முறையாக, மோட்டார் வாகனங்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் வானுக்குப் பயன்படுத்தியிருந்த இலக்கத்தகடு போலியானது என்பது உறுதியாகியுள்ளது. வான் கைப்பற்றப்படும்போது அதில் சாரதியாக பணியாற்றியவர் பொலனறுவையைச் சேர்ந்த ஏ.எம்.எச்.எஸ். அத்தபத்து என்ற இராணுவச் சிப்பாய். இவரைத் தவிர பிபிலை பகுதியைச் சேர்ந்த எச்.எம்.எஸ்.எஸ் ஹேரத் என்ற இராணுவச் சிப்பாயும் ஓமல்பே பகுதியைச் சேர்ந்த வசந்த என்ற கமாண்டோ படைப் பிரிவைச் சேர்ந்தவர் எனவும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இவர்களிடமிருந்து 9 மில்லி மீற்றர் ரகத்தைச் சேர்ந்த 245 – 12310 என்ற இலக்கத்தைக் கொண்ட ரிவோல்வரும் 13, 9 மில்லி மீற்றர் தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த ரிவோல்வரை தாம் 2009 ஆம் ஆண்டு முதல் பயன்படுத்திவருவதாக அதனைப் பயன்படுத்திய சிப்பாய், பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவின் உத்தரவிற்கு அமையவே அவருக்கு இந்தத் துப்பாக்கி வழங்கப்பட்டிருந்தது. இந்த துப்பாக்கி சட்டவிரோதமானது என இராணுவம் தெரிவித்துள்ளது.

அனுமதிப்பத்திரமின்றி இவ்வாறான துப்பாக்கியை வைத்திருப்பது பிணை வழங்க முடியாத குற்றமாகும்.எவ்வாறாயினும் இவர்கள் மூவரும் நேற்று முன்தினம் கங்கொடவில நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தலா ஒரு லட்சம் ரூபா ரொக்கப்பிணையில் விடுதலை செய்யப்பட்டமை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா தற்போது பாதுகாப்பு அமைச்சில் இராணுவத்திற்கு பொறுப்பான அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார்.

பிரசன்ன சில்வாமீதும் போர்க் குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன. எனினும் அப்போது பிரிகேடியராகப் பதவி வகித்த பிரசன்ன சில்வாவிடம் சரணடைந்தமை காரணமாகவே விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தந்தை மற்றும் தாய் ஆகியோர் இயற்கையாக மரணத்தைத் தழுவ முடிந்தது என்பது சர்வதேசமும் அறிந்த விடயமென சிங்கள இணையத்தளம் ஒன்று கூறியுள்ளது.

போர் முடிந்தவுடன் பிரசன்ன சில்வா, பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் பாதுகாப்பு ஆலோசகராக சேவையாற்றினார். அத்துடன் பிரசன்ன சில்வா, மகிந்த ராஜபக்ஷவிற்காக குருணாகல் மாவட்டத்தில் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் முன்னாள் இராணுவத் தளபதி தயா ரத்நாயக்கவின் நெருங்கிய நண்பர் எனவும் தெரியவந்துள்ளது.

இதனடிப்படையில், பிரசன்ன சில்வா, மகிந்த ராஜபக்ஷ மற்றும் கோதாபய ராஜபக்ஷ ஆகியோருக்கும் நெருக்கமானவர் என இராணுவ வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன