பழிவாங்கும் படலத்தில் கலைந்துபோன கனவு
தெளிவுத்தன்மையில்லாத அரசியலும் புரிந்துகொள்ள முடியாத தலைவர்களும் குட்டையைக் குழப்பிவிட்டு குழம்பிய குட்டையில் மீனைப் பிடித்துக் கொள்ளுமாறு நாட்டு மக்களைப் பார்த்து கூறி நையாண்டி பண்ணுவது போலிருக்கிறது இன்றைய இலங்கையின் தேசிய அரசியல்.
மைத்திரி – மஹிந்த என்ற சிங்களத் தேசியவாத தலைவர்களின் தலைகளுக்குள் இருப்பது தான் என்ன? பயணம் எதனை நோக்கியது என்பதை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாத போதிலும் இந்த தலைவர்களது பயணங்கள் தொடர்பில் ஓரளவுக்கேனும் நாட்டு மக்கள் ஊகித்து உணரக்கூடிய நிலையை அவர்களே உருவாக்கித் தந்துள்ளனர் என்பது தான் உண்மையானது.
யார் எதனைக் கூறினாலும் அவ்வாறு இல்லை என்று சாமி சிலைமீது அடித்து சத்தியம் செய்தாலும் இலங்கை அரசியலுக்குள் பழிவாங்கத் துடிக்கும் படலம் ஒன்று ஆரம்பித்து வைக்கப்பட்டு அது தற்போது கடுகதி வேகத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறது.
ஜனாதிபதி மைத்திரியின் பயணம் ஒரு விதமாக இருக்கையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் பயணம் வேறுமாதிரியானதாக இருப்பதே இதற்குக் காரணம்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைப் பொறுத்தவரையில் இந்நாட்டில் ஊழல், மோசடியற்ற சுதந்திரமான நல்லாட்சி ஒன்றை ஏற்படுத்தி விட வேண்டும் என்பதையே இலக்காகக் கொண்டு செயற்பட்டு வருகிறார்.
மேலும் நாட்டு மக்களின் நன்மதிப்பைக் கொண்டுள்ள மைத்திரி தனது சிந்தனையில் உதிக்கின்ற சில விடயங்களை உள்ளவாறே நிறைவேற்றிவிட வேண்டும் என்று நினைத்தவராக செயற்பட்டு வருவதும் கண்கூடாகும். இதற்கு உதாரணமாக 19ஆவது திருத்தம் மற்றும் நிறைவேற்றுவதற்கு முயற்சிக்கப்பட்ட 20ஆவது திருத்தம் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். அதுமாத்திரமின்றி சிகரட் பெட்டிகளில் எச்சரிக்கை விளம்பரத்தையும் இங்கு சுட்டிக் காட்ட முடியும்.
19ஆவது திருத்தத்தின் மூலம் ஓரிடத்தில் குவிந்து கிடக்கும் அதிகாரங்களை தளர்த்துவதற்கு இணக்கம் கொண்ட அவர் 20ஆவது திருத்தத்தினூடாக நாட்டின் மக்களிடையே ஏற்படுகின்ற ஏற்படுத்தப்படுகின்ற வன்முறைகளைத் தடுப்பதற்கும் அதேநேரம் இழப்புக்களை தவிர்ப்பதற்கும் என அவர் பிரயத்தனம் கொண்டதை நினைவுபடுத்தும் அதேவேளை சிகரட் பெட்டிகளின் மீது எச்சரிக்கை விளம்பரத்தை அதிகப்படுத்தியதன் மூலம் அவர் நாட்டு மக்களின் மீது கொண்டுள்ள பொறுப்பையும் கடமையையும் இன்னும் கூறினால் அவரது அன்பையும் வெளிப்படுத்தி நிற்பதாக எடுத்தியம்ப முடியும்.
மேலும் இனிவரும் காலங்களிலேனும் ஊழல், மோசடியற்ற நாட்டில் அனைத்துப் பிரஜைகளும் சம அந்தஸ்துடையவர்களாக வாழ்வதற்கான தளத்தை அமைத்து விடுவதற்கு அவர் முயற்சித்து வருகின்றார் என்றால் மிகையாகாது. மைத்திரியின் அரசியல் பயணம் இவ்வாறு அமைந்திருக்கையில் ஜனவரி மாதம் 8ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் சிறுபான்மை, பெரும்பான்மை மக்களால் தோல்வியடையச் செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த புதன் கிழமை 01ஆம் திகதி வரையில் மறைமுக அரசியல் செய்து வந்த நிலையில் தற்போது அதனை வெளிப்படையாக அறிவித்துளளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் பின்னணியில் இணைந்துள்ள கூட்டாளிகள் அண்மைக்காலமாக "மண்ணெண்ணெய் பட்ட சாரை" போன்று துடித்துக் கொண்டிருப்பதையும் செயற்பட்டு வருவதையும் காணமுடிகின்றது. இதனை மக்கள் நன்கு அறிந்து புரிந்து வைத்துள்ளனர்.
சிங்களவாத அரசியலுக்குள்ளும் இனவாத, மதவாத சிந்தனைக்குள்ளும் இன்று வரையில் புலிகளையும் புலிகளின் தலைவரையும் உயிரோடு இருப்பதாக சித்திரித்துக் காட்டுகின்ற ஒரு மாயத் தோற்றத்துடனான நிலைப்பாட்டைக் கொண்டுதான் இந்த மஹிந்த கூட்டாளிகள் செயற்பட்டு வருகின்றனர். இந்தக் கூற்றுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ விதிவிலக்கல்ல என்பதையும் கூறவேண்டியுள்ளது.
இனவாதம், மதவாதம் மற்றும் புலிவாதம் இம்மூன்று மந்திரங்களை மாத்திரமே தமது அரசியல் ஆயுதமாக பாவித்து வருகின்ற மேற்குறிப்பிட்டோர் இன்று பழிவாங்கும் அரசியலை செய்து வருகின்றனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இருந்து கொண்டு எவரும் அறியாது வெளியேறியமை, மஹிந்த ராஜபக் ஷ என்ற மனிதரை எதிர்த்து நின்றமை, சிறுபான்மை மக்களாலும் ஐக்கிய தேசியக் கட்சியாலும் மைத்திரி அரியாசனம் அமர்ந்தமை, மஹிந்த என்ற நபரை தோல்வியடையச் செய்தமை, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக்கியமை, அதன் மூலம் அரசாங்கத்தைக் கலைத்து ஆட்சியை ஐக்கிய தேசியக் கட்சியிடம் ஒப்படைத்தமை, நிறைவேற்று அதிகாரங்களைத் தளர்த்தியமை, 18ஆவது திருத்தத்தை வலுவிழக்கச் செய்தமை, வடக்கின் ஆளுநனரை உடனடியாக மாற்றியமை, பிரதம நீதியரசரை வீட்டுக்கு அனுப்பியமை, குற்றவாளியாக சித்திரிக்கப்பட்ட முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவை மீண்டும் பதவியில் அமர்த்தியமை, முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவை குற்றங்களில் இருந்து விடுவித்தமை, அவருக்கு பதவி உயர்வைப் பெற்றுக் கொடுத்தமை, வடக்கில் காணிகளை மக்களிடம் மீளளித்தமை உள்ளிட்ட பல்வேறு செயற்பாடுகள் தொடர்பில் பொறுத்துக் கொள்ள முடியாத காரணத்தால் பழிவாங்கும் படலம் தீட்டப்பட்டிருக்கலாம் என்பதை ஊகிக்க முடியும்.
எல்லாவற்றுக்கும் மேலாக அமைச்சர்களாக இருந்து அதிகாரத்தில் வலம் வந்தவர்கள் ஓரிரு தினங்களில் ஒன்றுமில்லாதவர்களாக ஆக்கப்பட்ட வெறுப்புணர்வு அங்கு அரசியல் ரீதியிலான பகைமையாகக்கூட மாறியிருக்க வாய்ப்பு உண்டு.
இவ்வாறான அடிப்படைக் காரணங்களை பற்றிப்பிடித்துக் கொண்டுதான் மைத்திரியின் மாற்று அணியினர் செயற்பட்டு வருகின்றனர். அளவுக்கு மீறிய சுதந்திரமும் மிதமிஞ்சிய ஜனநாயக உரிமைகளும் வழங்கப்பட்டு விட்டாலும் கூட இப்படித்தான் நடக்கும் என்பது உதாரணமாகியுள்ளது. அந்த வகையில் மைத்திரியால் முன்னெடுக்கப்படும் அனைத்து செயற்பாடுகளுக்கும் முட்டுக்கட்டையிட்டு முடக்கிவிடுவதற்கு செயற்பட்டு வருகின்றமை நாட்டு மக்களுக்கு வெளிச்சம்.
நாட்டின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் பொருட்டு நல்ல பல அரசியல் தலைவர்களை உருவாக்க வேண்டும் என்ற ரீதியில் செயற்படுவதாகக் காட்டிக் கொள்கின்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்தகால அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுத்த முதற்கட்ட நடவடிக்கைதான் அடுத்து வரும் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவை வேட்பாளர் பட்டியலில் இணைத்துக் கொள்ளவில்லை என்ற தீர்மானமாகும்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்3ஷவை மைத்திரி அணியுடன் இணைத்து அவரைப் பிரதமராக்கி விடுவதற்கும் மஹிந்தவின் முதுகில் ஏறி பாராளுமன்றம் வருவதற்கும் கணக்குப் போட்டவர்களது வயிற்றில் தற்போது புளியை கரைத்து வார்த்தது போலாகி விட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்த அதிரடி முடிவானது நாட்டின் தலைவர் என்ற ரீதியில் அவரது துணிச்சல் வெளிப்பட்டு நிற்பதைக்காட்டுகின்றது.
இதனால் கட்சி பிளவுபடும் என்ற தோற்றம் கண்முன்னே தெரிகின்ற போதிலும் அவர் தனது நிலைப்பாட்டிலிருந்து மாறாதவர் என்பதை நிரூபித்திருக்கின்றார். இதனால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் பிரதமராகும் கனவு கலைக்கப்பட்டிருக்கிறது. மஹிந்தவின் பரிவாரங்களின் பேராசையும் நிராசையாகிவிட்டுள்ளது.
மைத்திரியின் தீர்மானத்தால் சுதந்திரக் கட்சி பிளவுபடும் என்ற ரீதியில் ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்காலம் பிரகாசித்திருக்கின்றது எனலாம். தனியான அணியில் போட்டியிடும் நிலைக்கு மஹிந்த ராஜபக்்ஷ தள்ளப்பட்டுள்ளமைக்கு அவரைச் சுற்றியிருக்கின்ற கூட்டாளிகளே காரணமாகிவிட்டனர். கடந்த காலங்களில் உடன்பிறப்புக்களை நம்பி மோசம் போன மஹிந்த இன்று ஊரானை நம்பி இரண்டும் கெட்டான் நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளார்.
இதேவேளை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இரண்டு தடவையாக ஜனாதிபதி பதவி வகித்து விட்டு மிகவும் கெளரவமான முறையில் அரசியல் களத்திலிருந்து ஒதுக்கியிருந்தார். எனினும் நாட்டின் நிலைமைகளைக் கருத்திற் கொண்டவராக மைத்திரியுடன் கை கோர்த்து இலங்கை அரசியலுக்குள் புரட்சியொன்றை ஏற்படுத்தியிருந்தார் என்பது உண்மைதான். ஜனவரி மாதம் 8ஆம் திகதி நடத்தப்பட்டதே அந்த அரசியல் புரட்சியாகும்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்்ஷவினால் பழிவாங்கப்பட்ட சந்திரிகா சுதந்திரக்கட்சியை சீரழித்தவரே மஹிந்த ராஜபக் ஷ தான் என்ற ரீதியில் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றார். அத்துடன் மஹிந்த ராஜபக்்ஷ மீண்டும் அரசியல் களத்தில் குதிப்பதை அவர் முற்றாக வெறுப்பவராகவே செயற்பட்டு வருகின்றார். இதனை வெளிப்படுத்தும் முகமாக அண்மைக்காலமாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்்ஷவை பகிரங்கமாகவே மிகக் கடுமையாக சாடியும் வருகின்றார்.
கடந்த காலங்களில் சந்திரிகாவுக்கு நடந்தது என்னவென்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நடந்தது என்ன என்பது பற்றியும் நாட்டுமக்கள் அறிந்தே வைத்துள்ளனர். இவ்வாறான நிலையில் தான் மஹிந்த புராணம் பாடியவர்களுக்கு மைத்திரியின் ஆப்பு விழுந்துள்ளது. மேலும் இந்நாட்டில் நல்லாட்சியையும் ஜனநாயகத்தையும் நிலை நிறுத்துவதற்கும் மக்களின் தேவைகளை அறிந்து உண்மையான சேவகம் செய்வதற்கும் அதேநேரம் சர்வதேச ரீதியில் எழுந்துள்ள எமது நாடு தொடர்பான பிரச்சினைகளையும் அழுத்தங்களையும் எவ்வாறு சமாளிப்பது, உள்ளூர் பிரச்சினைகளை எந்த அடிப்படையில் தீர்ப்பது என்பது தொடர்பிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தீர்க்கதரிசனமாகவும் அதே நேரம் மிக நிதானமாகவும் கையாண்டு வருகின்றனர்.
ஏனெனில் ஊழல், மோசடி எனும் குற்றச்சாட்டுக்களில் இருந்தும் கறைகளில் இருந்தும் தூர விலகியிருப்பவர்களான மைத்திரியும் ரணிலும் மாத்திரமே இந்நாட்டின் கண்ணியமான அரசியல் தலைவர்களாக மிளிர்ந்து கொண்டிருக்கின்றனர். இது உணரப்பட்டதாலேயே மைத்திரிபால சிறிசேன தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆட்சி அதிகாரத்தையும் அரசாங்கத்தையும் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மனதுக்குள் சுதந்திரக்கட்சியின் வீழ்ச்சி தொடர்பான நெருடல் ஒன்று இருக்கின்ற போதிலும் அவர் நாடு தொடர்பிலும் நாட்டுமக்கள் தொடர்பிலும் மிகுந்த அன்பு கொண்டவராக இருப்பதாலேயே அதிகார இயலுமை இருந்தும் அடக்கி வாசிப்பராக இருந்து வருகின்றார்.
முதலாவதும் நாடு, இரண்டாவதும் நாடு, மூன்றாவது நாடு என்று கூறுவோரை நாம் பார்த்திருக்கின்ற போதும் அதனை செயற்படுத்திக் காட்டுபவராகவே மைத்திரி திகழ்ந்து கொண்டிருக்கிறார்.
மைத்திரியின் மிதவாதப்போக்கு, மஹிந்த அணியின் இனவாதப்போக்கு, ரணில் அணியின் மக்கள் வாதப்போக்கு ஆகியவற்றுக்கு மத்தியில் இன்றைய ஆட்சி எதிர்காலத்திலும் தொடர்வதற்கான சாத்தியப்பாடுகளே அதிகரித்துக் காணப்படுகின்றன.
இது இப்படியிருக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமைப்பதவியை ஏற்றுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வெற்றி அவரது இலக்காக இருக்கிறது. மைத்திரி தலைமையில் சு.க. தோல்வியடைந்தது என்ற வரலாற்றைப் பதித்துவிடக்கூடாது என்பதிலும் அவர் கவனமாக இருக்கக்கூடும். ஆதலால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தான் அறிவித்த வகையிலும் கௌரவத்தைப் பாதுகாக்கும் வகையிலும் பிறிதொரு கட்சியில் போட்டியிடுவாரேயானால் அங்கிருந்து கிடைக்கப்பெறும் ஆசனங்களையும் இணைத்துக் கொண்டு அடுத்துவரும் அரசாங்கத்தை அமைப்பது தொடர்பிலும் சிந்திக்க வாய்ப்புள்ளது.
ஏனெனில் அரசியலில் நிரந்தர பகைவனுமில்லை, நிரந்தர நண்பனுமில்லை என்ற வாக்கை அவர் மெய்ப்பித்து வருவாரேயானால் ஐக்கிய தேசியக் கட்சியினால் ஆட்சியமைக்க முடியாது போய்விடும். எப்படியிருப்பினும் யார் எவ்வாறு சிந்தித்தாலும் அடுத்துவரும் அரசாங்கமும் தேசிய அரசாங்கமாகவே அமையப்போகிறது என்று கூறப்படுவதையும் நம்பவேண்டித்தான் உள்ளது. மைத்திரி தனது கௌரவத்தை பாதுகாப்பதற்கு முயற்சித்து ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பாரேயானால் அவர் கட்சியைப் பாதுகாத்தவராகவும் தனது நற்பெயரை பாதுகாத்தவராகவும் ஆகிவிடுவார்.
ஏனெனில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை அதிகாரத்தில் அமர்த்திய ஐக்கிய தேசியக் கட்சியுடனான தமிழ் பேசும் மக்களை மறந்து செயற்படமாட்டார் என்ற நம்பிக்கையும் அதிகரித்துக் காணப்படுகின்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை நம்பி வாக்களித்தவர்கள் யார் என்பதையும் வாக்களிக்காது தன்னை தோல்வியடையச் செய்ய மேற்கொள்ளப்பட்ட சதித்திட்டங்களின் சூத்திரதாரிகள் யார் என்பதையும் இன்னும் கூறப்போனால் இன்று வரையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற திரைமறைவுச் செயற்பாடுகளையும் நன்கு உணர்ந்தே வைத்துள்ளார். சுதந்திரக் கட்சிக்குள் இருந்து வருகின்ற உட்பூசல்கள், வெளிப்பூசல்கள் எல்லாமே அம்பலத்துக்கு வந்துள்ள நிலையில் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவின் காய் நகர்த்தல்கள், தீர்க்கதரிசன முடிவுகள் அக்கட்சியின் நீண்டகால கனவை நனவாக்கும் விதமாக அமைந்துள்ளது.
இந்நிலைமையை மக்கள் நன்கு உணரவேண்டியுள்ளது. நாட்டு மக்கள் எனும் போது அவர்கள் சிந்தித்து செயலாற்றும் ஆற்றலைத் தமதாக்கிக் கொள்ளுதல் அவசியமாகின்றது. வாக்களித்தல் எனும் போது அது நாட்டினதும் மக்களினதும் தலைவிதியையே மாற்றியமைக்கும் வல்லமை பொருந்தியதாக இருக்கின்றது.
யாருக்கு வாக்களிப்பது – யாரை நிராகரிப்பது என்பதை அந்த வேட்பாளரின் கடந்த கால செயற்பா டுகளில் இருந்து அறிதல் வேண்டுமாக உள்ளது. எதிர்வரும் 6ஆம் திகதி முதல் 13ஆம் திகதி நண்பகல் 12.00 மணிவரையில் 8 தினங்களில் வேட்பாளர் பட்டியல் சமர்ப்பி க்கப்படுவதற்கு அவகாசம் வழங்க ப்பட்டுள்ளது. அவ்வாறு சமர்ப்பிக்க ப்படுகின்ற வேட்பாளர் பட்டியலில் உள்ளடக்க ப்பட்டிருப்போர் தொடர்பில் பூரண தெளிவடைதல் இன்றியமை யாததாகும்.
தேர்தல் காலங்களில் மாத்திரமே தலை காட்டி குசலம் விசாரிக்க வருகின்ற அரசியல் வாதிகள் தொட ர்பில் அவதானமாக இருக்க வேண்டியது வாக்காளர்களின் பொறுப்பாகும். பெறுமதிமிக்க வாக்குரிமையானது பெறுமதி மிக்கதாய் அளிக்கப்படுதல் வேண்டுமே தவிர அது பயனற்றதாய் இருந்து விடக்கூடாது. மேலும் வாக்காளர் களாகிய மக்கள் இன்று நன்கு தெளிவடைந்து ள்ளனர் என்பதை வேட்பாளர் பட்டியலில் உள்ளவர்கள் உணர்ந்து கொண்டால் சிறந்ததுதான்.
மேலும் மைத்திரி, ரணில் மற்றும் மஹிந்த என்ற முத்தரப்பு போட்டி யொன்று இடம் பெறும் பட்சத்தில் மைத்திரியும் ரணிலும் இணைவார்க ளேயானால் அங்கு மஹிந்த ராஜபக் ஷ எதிர்கட்சி தலைவராக அமர்வார் என்பதில் சந்தேகமே இல்லை. இந்நிலைமையும் எதிர்காலத்தில் இலங்கை அரசிலுக்குள் தலைவலியாகவே இருக்கப்போகிறது என்பதையும் மறுக்கலாகாது.