Breaking News

நாட்டுக்காக எந்தச் சவாலையும் எதிர் கொள்ளத் தயார் : ஜனாதிபதி

நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் இனி எந்தவித சவாலையும் வெற்றி கொள்ளத் தயார் என்று இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 


 சவால்களுக்கு முகம் கொடுக்கவே தான் ஜனாதிபதி பதவிக்கு வந்ததாகவும் எந்தவித சவால்களுக்கும் சளைக்காமல் முன் செல்லும் சக்தி தமக்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். 

மாவனல்ல,உஸ்ஸாபிடிய, அரநாயக்க ரிவிசந்த மத்திய மகா வித்தியாலயத்தில் நவீன தொழில்நுட்ப விஞ்ஞான பீடத்தை மாணவர் பாவனைக்கு ஒப்படைக்கும் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

போதைப்பொருள் தொல்லையை ஒழிப்பதற்கும் சுற்றாடலைப் பாதுகாப்பதற்குமாக பாடசாலை மாணவர்களுக்கு அறிவூட்டும் நாடளாவிய வேலைத் திட்டம் எதிர்வரும் வாரங்களில் அமுல் செய்யப்படும் என்றும் இதன்போது ஜனாதிபதி குறிப்பிட்டார். நாட்டுக்குத் தேவையான உணவுப் பொருட்களை எமது நாட்டிலேயே உற்பத்தி கொள்வதற்கான விசேட வேலைத்திட்டம் பொதுத் தேர்தலுக்குப் பின் ஆரம்பிக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். 

 நாட்டு மக்களுக்காக இனி எந்த சவாலையும் எதிர்கொள்ளத் தயார் என்று கூறிய ஜனாதிபதி அதற்காகவே நாட்டின் ஜனாதிபதி ஆகியதாகவும் குறிப்பிட்டார். முன்னாள் பிரதி அமைச்சர் லலித் திசாநாயக்க, மாகாண சபை உறுப்பினர் ஆனந்த மில்லன்கொட உட்பட பலரும் இதில் கலந்து கொண்டனர்.