மைத்திரியை மிரட்டும் மகிந்த – ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குள் புதிய நெருக்கடி
ஊழல் மற்றும் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருக்கும் மகிந்த ராஜபக்ச ஆதரவாளர்களுக்கு தேர்தலில் போட்டியிட இடமளிப்பது தொடர்பாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குள் புதிய இழுபறி தோன்றியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருக்கும் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான பலருக்கு வேட்பாளர் பட்டியலில் இடமளிக்க முடியாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பசில் ராஜபக்ச, மேர்வின் சில்வா, துமிந்த சில்வா, சஜின் வாஸ் குணவர்த்தன உள்ளிட்டவர்களும் மைத்திரிபால சிறிசேனவினால் நிகராகரிக்கப்பட்டவர்களுள் அடங்கியுள்ளனர். இவர்கள் தவிர, மகிந்த ராஜபக்சவுக்கு மிக நெருக்கமான பலருக்கும் வேட்புமனுவில் இடமளிக்க மைத்திரிபால சிறிசேன விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
இந்தநிலையில், தனது ஆதரவாளர்களுக்கு போட்டியிட இடமளிக்கப்பட வேண்டும் என்று மகிந்த ராஜபக்ச அழுத்தம் கொடுத்து வருகிறார். இல்லாவிட்டால், தாம் கூட்டணியில் இருந்து வெளியேறப்போவதாக மகிந்த ராஜபக்ச மிரட்டி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் பட்டியல் இழுபறிக்கு உள்ளாகியிருக்கிறது. நாளை ஜனாதிபதி செயலகத்தில் வேட்பாளர்கள் கையெழுத்திடத் திட்டமிட்டுள்ள போதிலும், மகிந்த ராஜபக்ச வரும் வெள்ளியன்றே வேட்புமனுவில் கையெழுத்திடமுடியும் என்றும் கூறியுள்ளதாக தெரிய வருகிறது.
இந்த நிலையில், நேற்று எதிர்க்கட்சித் தலைவர் பணியகத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர்கள் பங்கேற்கவிருந்த செய்தியாளர் சந்திப்பு இடைநிறுத்தப்பட்டுள்ளது.
எதிர்வரும் 13ஆம் நாள் வேட்புமனுக்களை கையளிக்கும் வரை எந்த பகிரங்க கருத்துக்களையும் வெளியிடுவதை தவிர்க்க விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார, தினேஸ் குணவர்த்தனவை உள்ளடக்கிய மகிந்த ஆதரவுத் தலைவர்கள் தீர்மானித்துள்ளதாக, மகிந்த ராஜபக்சவின் பேச்சாளர் ரொகான் வெலிவிட்ட தெரிவித்துள்ளார்.