அரசியலும் வேண்டாம் அமெரிக்க குடியுரிமையும் வேண்டாம்! கோத்தபாய அதிரடி
எதிர்வரும் பொதுத் தேர்தலில் தான் போட்டியிட போவதில்லை என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தேர்தலில் போட்டியிட போவதாக பரவி வரும் வதந்தி தொடர்பாக பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்த சிலர் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதன் காரணமாக தான் தேர்தலில் போட்டியிடவில்லை எனவும் மக்களுக்கு சேவையாற்ற நாடாளுமன்ற உறுப்பினர் பதவி அவசியமற்றது எனவும் கோத்தபாய கூறியுள்ளார்.
அத்துடன் எதிர்காலத்திலும் நாட்டுக்காக எந்த அர்ப்பணிப்பையும் மேற்கொள்ள தாம் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க பிரஜையாக இருப்பதால், தேர்தலில் போட்டியிட தயங்குகிறீர்களா என ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள கோத்தபாய, அப்படியான தடைகள் இல்லை எனவும் அமெரிக்க குடியுரிமையை இரத்துச் செய்ய தேவையான ஆவணங்களை தாம் அமெரிக்க தூதரகத்திடம் கையளித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.