ராஜீவ் கொலையாளிகளை விடுவிக்க வேண்டும் – இந்திய உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி
ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு பொதுமன்னிப்பு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட வேண்டும் என்று இந்திய உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு தெரிவித்துள்ளார்.
இந்திய ஊடகப் பேரவையின் தலைவராகவும் முன்னர் பதவி வகித்திருந்த நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு அடிக்கடி சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டு வருபவர்.
அவர், Satyam Bruyat என்ற தனது வலைத்தளத்தில், ராஜீவ் கொலையாளிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து நேற்று பதிவொன்றை இட்டுள்ளார். “ராஜீவ்காந்தி கொலையாளிகள் 24 ஆண்டுகள் சிறையில் இருந்து விட்டனர். அவர்களுக்கு பொதுமன்னிப்பு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.
அதுபோல, ஹைதராபாத் சிறையில் உள்ள அப்புதல் காதர், திஹார் சிறையில் உள்ள தேவிந்தர் பால் சிங் புல்லர், யேரவாடா சிறையில் உள்ள சைபுநிஷா குவாசி, ஆகியோரையும் பொதுமன்னிப்பு அளித்து விடுவிக்க வேண்டும். இவர்களுக்கு பொதுமன்னிப்பு அளிப்பது குறித்து ஏற்கனவே வேண்டுகோள் முன்வைத்துள்ளேன்.
நான் படுகொலையை நியாயப்படுத்தவில்லை. ஆனால், சிறிலங்காவுக்கு இந்திய இராணுவத்தை அனுப்புவதற்கு ராஜீவுக்கு என்ன வேலை இருந்தது?- அதன் காரணமாவே ஆயிரக்கணக்கான தமிழர்களும், 3000 எமது படைவீரர்களும் மரணமாகினர்.
இது தமிழர்கள் மத்தியில் ஒரு வலிமையான எதிர்ப்புணர்வை ஏற்படுத்தாமலா போகும்? 1984இல் தனது தாயின் படுகொலைக்குப் பின்னர், ராஜீவ்காந்தியின் உத்தரவின் பேரில் ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அப்போது ராஜீவ் கூறியது, அவரை ஒரு கிரிமினலாக காட்டியது. ” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.