விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர் அரசியல் பிரவேசம் ஏன்?
தனித்தனியாக பிரிந்து கிடந்த தமிழ்த்தேசிய அரசியல் தலைமைகளை ஒன்றாக்கியதே விடுதலைப் புலிகள்தான் என்பதால், அதன் முன்னாள் உறுப்பினர்களின் நேரடி அரசியல் பிரவேசம் கூட்டமைப்பை வலுப்படுத்தி வெளிப்படைத்தன்மையுள்ளதாக்கும் என்கிறார் அவர்கள் சார்பில் பேசும் வித்யாதரன்.
விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் ஒன்றிணைந்து ஜனநாயகப் போராளிக் கட்சி என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியொன்றை ஆரம்பிக்கத் தீர்மானித்திருக்கின்றார்கள்.
ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறவுள்ள இலங்கை பொதுத்தேர்தலுக்கான அரசியல் சூழலிலேயே இவ்வாறு புதிய அரசியல் அமைப்பு ஒன்றை உருவாக்கி அரசியலில் ஈடுபடுவதற்குத் தாங்கள் முனைந்திருப்பதாக வெள்ளியன்று யாழ்ப்பாணத்தில் ஒன்றுகூடி தீர்மானங்களை எடுத்ததன் பின்னர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையொன்றில் அவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
வரும் பொதுத் தேர்தலில் வடக்கு கிழக்கு மாகாணங்களின் தேர்தல் மாவட்டங்கள் தோறும் முன்னாள் உறுப்பினர்கள் இருவரை, தமது வேட்பாளர் பட்டியலில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பிடம் கோருவது என்றும் அவர்கள் தீர்மானித்திருக்கின்றார்கள்.
புதிய கட்சியை அமைக்கும் வரையில் இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக மூத்த ஊடகவியலாளர் என்.வித்தியாதரன் செயற்படுவார் என்றும் அவர்கள் தமது அறிக்கையில் தெரிவித்திருக்கின்றனர்.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, மட்டக்களப்பு மாவட்டங்களைச் சேர்ந்த சிரேஷ்ட போராளிகள் பலர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு, பல்வேறு விடயங்கள் குறித்து மூன்று மணித்தியாலங்கள் ஆராய்ந்து தீர்மானங்களை எடுத்துள்ளதாக அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினரான பிள்ளையான் முன்பு கிழக்கு மாகாண முதல்வராக இருந்திருக்கிறார்
தமிழ்ப்பேசும் மக்களின் ஒட்டுமொத்த நலன்களை வென்றெடுப்பதற்காக அதிர்வுள்ள வகையில் செயற்படும் ஒரு புதிய ஜனநாயக அரசியல் கலாசாரத்தை முன்னெடுக்க வேண்டிய தேவை எழுந்துள்ளதன் காரணமாகவே புதிய அரசியல் அமைப்பைத் தாங்கள் உருவாக்க முன்வந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழர்களின் உரிமைகளை ஈட்டுவதற்கான ஜனநாயக நடவடிக்கைகளில் அர்த்தமுள்ள வகையில் நேர்மையுடனும் நெஞ்சுரத்துடனும் ஈடுபட்டு, ஒரு முறையான அரசியல் தலைமைத்துவத்தை தமிழர்கள் மத்தியில் நிலைநிறுத்துவது.
கடந்த கால இழப்புகளினால் பாதிக்கப்பட்ட நமது மக்களின் வாழ்வாதார வளங்களைக் கட்டி எழுப்பி, புனர்வாழ்வு, புனரமைப்புப் பணிகளை உத்வேகத்துடன் முன்னெடுத்து, அரசியல் கைதிகளின் வலியை நன்கு பட்டறிந்து உணர்ந்தவர்கள் என்ற வகையில் அவர்களின் விரைந்த விடுதலைக்கு அழுத்தம் தந்து அர்த்தமுள்ள வகையில் பங்களிப்பது.
நீதி, நியாயமான ஜனநாயக நடவடிக்கைகளில் அர்த்த சுத்தியுடன் ஈடுபடுவதன் மூலம், தமிழ்ப்பேசும் மக்களின் இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகாண்பதற்கு தமிழர்களுக்கும் தென்னிலங்கையின் நியாயமான அரசியல் தலைமைகளுக்கும் இடையில் பலமான இணைப்புப் பாலமாக விளங்கத்தக்க வகையில் வினைத்திறனுடனும் செயற்படுவது போன்ற தீர்மானங்களுடன், பொதுத் தேர்தலையொட்டி மேற்கொண்டு எடுக்கவேண்டிய தந்திரோபாய உத்திகள் குறித்தும் இந்தச் சந்திப்பின்போது, ஆராய்ந்து திட்டங்கள் வகுக்கப்பட்டன என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.