வடக்கு கிழக்கில் மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு இலவச மின்சாரம்!
வடக்கு கிழக்கில் மீள் குடியேற்றப்பட்ட குடும்பங்களுக்கு இலவச மின்சாரம் வழங்கல் திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
வடக்கு கிழக்கில் இடம்பெற்ற ஆயுதப் போராட்டம் காரணமாக இடம்பெயர்ந்த சகல குடும்பங்களையும் மீள்குடியேற்றுவதற்கு அரசாங்கம் தொடர்ச்சியாக முயற்சி எடுத்து வருகின்றது.
இதனைச் செயற்படுத்தும் போது பலவேறு இக்கட்டான நிலைகளும் குறைபாடுகளும் எதிர்ப்படுகின்றன. தற்போது 232,828 குடும்பங்கள் (796,342 நபர்கள்) வடக்கு கிழக்கு மாகாணங்களில் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர்.
குறித்த மீள்குடியேற்றப்பட்ட குடும்பங்களில் பெரும்பாலான மக்கள் தமக்குரிய மின் இணைப்புக்களை பெற முடியாத நிலையில் இருக்கின்றனர்.
எனவே வட மாகாணத்தில் மீள்குடியேற்றப்பட்ட 20,000 குடும்பங்களுக்காவது இலவச மின் இணைப்பை பெற்றுக் கொடுப்பதற்கும், 2015 ஆம் ஆண்டில் மீள் குடியேற்றப்பட்ட 5,000 குடும்பங்களுக்கு இலவசமாக வீட்டு மின் வழங்கல் இணைப்பை ஏற்பாடு செய்வதற்காக 105 மில்லியன் ரூபாவினை வழங்குவதற்கும் மின் வலு மற்றும் வலு சக்தி அமைச்சர் பாட்டாலி சம்பிக ரணவக்க மற்றும் மீள்குடியேற்றம், புனர் நிர்மாணம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் ஆகியோரினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.