ஆசனப் பங்கீடு குறித்து இறுதி முடிவு நாளை வவுனியாவில் கூடுகிறது கூட்டமைப்பு
எதிர்வரும் பொதுத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்காளிக் கட்சிகளுக்கிடையில் ஆசனப் பங்கீடு குறித்து இறுதி முடிவை எடுப்பதற்காக நாளைய தினம் வவுனியாவில் கூடவுள்ளது.
முன்னதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவர்களுக்கிடையில் நடைபெற்ற கூட்டத்தின்போது யாழ்ப்பாணம், திருகோணமலை உள்ளிட்ட தேர்தல் தொகுதிகளில் ஆசனப் பங்கீடு குறித்து இணக்கம் காணப்பட்டிருந்தது.
எனினும் மட்டக்களப்பு , வன்னி தேர்தல் தொகுதிகளில் இணக்கம் எட்டப்படாத நிலை நீடித்திருந்தது. இதனால் ஆசனப்பங்கீடு குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இறுதித் தீர்மானமொன்றை அறிவித்திருக்கவில்லை. இந்நிலையிலேயே நாளைய தினம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவர்களின் கூட்டம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் மற்றும் பொதுத் தேர்தலில் முன்னெடுக்கப்படவுள்ள வியூகங்கள்குறித்து ஆராயப்படுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.