Breaking News

கூட்டமைப்பு இன்று வேட்புமனுத் தாக்கல்

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக, வடக்கு, கிழக்கின் ஐந்து தேர்தல் மாவட்டங்களிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யவுள்ளது.

இன்று பிற்பகல் 1.30 மணிக்குப் பின்னர், யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மாவட்டச் செயலகங்களில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் முதன்மை வேட்பாளர்கள் வேட்புமனுகளைக் கையளிப்பர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நாடாளுமன்றத் தேர்தலில் களமிறங்கமாட்டார் என்றும் தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்றம் வருவார் என்றும் பேசப்பட்ட கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், திருகோணமலை மாவட்டத்தில் மீண்டும் முதன்மை வேட்பாளராகப் போட்டியிடவுள்ளார்.

அதேவேளை, யாழ்ப்பாணத்தில் மாவை சேனாதிராசாவும், வன்னி தேர்தல் மாவட்டத்தில் செல்வம் அடைக்கலநாதனும், மட்டக்களப்பில் பொன் செல்வராசாவும், அம்பாறையில் ஹென்றி மகேந்திரனும் முதன்மை வேட்பாளராக போட்டியிடவுள்ளனர்.

கடந்த முறை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்களில், அப்பாத்துரை விநாயகமூர்த்தி தவிர்ந்த ஏனைய அனைவரும் இம்முறையும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.