காணிகளை விடுவிப்பதற்கு இராணுவத்தினர் இணக்கம்- கிளி . மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவிப்பு
தம் வசமுள்ள காணிகளை விடுவிப்பதற்கு இராணுவத்தினர் இணக்கம் தெரிவித்துள்ளனர். அவற்றை விடுவித்து மக்களை மீள் குடியேற்றுவதற்கு துரித நடவடிக்கை எடுக்கப்படுமென கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.
மீள்குடியேற்ற, புனர்நிர்மாண மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் டி.எம் சுவாமிநாதனுடனான சந்திப்பொன்று நேற்று முன்தினம் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இச் சந்திப்புக் குறித்து அரச அதிபர் குறிப்பிட்டதாவது,
கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச செயலர் பிரிவில் 181 குடும்பங்களும் கண்டாவளை பிரதேச செயலர் பரிவில் 27 குடும்பங்களும் பூநகரி பிரதேச செயலர் பிரிவில் 342 குடும்பங்களும் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவில் 257 குடும்பங்களுமென 807 குடும்பங்ள் மீள்குடியேற வேண்டியிருப்பதாகவும் பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் கண்ணிவெடி அகற்றுவதில் ஏற்பட்ட தாமதத்தினால் மீள் குடியேற்றம் செய்யமுடியாத நிலைமை காணப்படுகின்றது.
ஏனைய இடங்களில் இராணுவத்தினர், கடற்படையினர், பொலிஸார் ஆகியோரின் பயன்பாட்டில் இருக்கின்ற காணிகளில் மக்கள் குடியேறவேண்டியி ருக்கின்றது.
இராணுவத்தினரின் பயன்பாட்டில் உள்ள காணிகளை விடுவிப்பதற்கு இராணுவத்தினர் இணக்கம் தெரிவித்திருக்கின்றனர். பிரதேச செயலாளர்கள், காணி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அவற்றை சென்று பார்வையிடுவதற்கும் இணக்கம் தெரிவித்திருக்கின்றனர். அவற்றை விடுவித்து மக்களை மீளக்குடியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் வெடி பொருட்கள் அகற்றுவதில் ஏற்பட்டுள்ள தாமதம் தொடர்பாக மீள்குடியேற்ற அமைச்சர் விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு கண்ணிவெடி அகற்றும் பிரிவின் பிராந்திய முகாமையாளருக்கு அறிவுறுத்தலை வழங்கி மிக விரைவாக இது சம்பந்தமாக ஒரு கால அட்டவணை தயாரித்து பணிகள் நிறைவுறுத்தப்பட வேண்டும் என்ற ஆலோசனையும் அறிவுறுத்தலையும் வழங்கியுள்ளார். இதனை மாவட்ட செயலகமும் இணைந்து செயற்படுத்துவதற்கு தயாராக உள்ளது என்றார்.