வலி.வடக்கில் மேலும் சில பகுதிகள் விடுவிக்கப்படலாம்! மாவை நம்பிக்கை
உயர் பாதுகாப்பு வலயமாக இருக்கும் யாழப்பாணம் வலி.வடக்குப் பிரதே சத்தில் மேலும் சில பகுதிகள் விடுவிக்கப்படும். இது தொடர்பில் நாளை சனிக்கிழமை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தலை மையில் நடக்கும் கூட்டத்தில் இறுதி செய்யப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை. சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதியில் அமைந்துள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமையகத்தில் அவர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்:- அண்மையில் யாழ்ப்பாணத்துக்கு வந்த மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் உயர் பாதுகாப்பு வலயத்தின் பகுதிகளைப் பார்வையிட்டார்.
இதன்போது அவருக்குப் பல விடயங்களைத் தெளிவுபடுத்தினோம். இந்நிலையில் நாளை சனிக்கிழமை உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தலைமையில் கூட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் உயர் பாதுகாப்பு வலயத்தில் இருக்கும் பகுதிகள் சிலவற்றை விடுவிப்பது தொடர்பில் ஆராயப்படவுள்ளது.
இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நாமும் கலந்துகொள்ளவுள்ளோம். இதன்போது அண்மையில் விடுவிக்கப்பட்ட தோலகட்டி, வசாவிளான் பகுதிகளில் மூடப்பட்ட வீதிகள் தொடர்பாகவும், வறுத்தலை விளானில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாம்கள் தொடர்பிலும் சுட்டிக்காட்டவுள்ளோம். அத்துடன் உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் அமைந்துள்ள பலாலி அம்மன் ஆலயத்தை மக்கள் வழிபாட்டுக்காக விடுவிப்பது தொடர்பிலும் உரையாடுவோம் - என்றார்.