Breaking News

கூட்டமைப்பின் வேட்பாளர் ஒதுக்கீடு குறித்து நாளை இறுதி முடிவு – இரா.சம்பந்தன்

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்துவது தொடர்பாக, நாளை முடிவு செய்யப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு இடையில், வேட்பாளர்களுக்கு இடம் ஒதுக்குவது தொடர்பாக இன்னமும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. யாழ்ப்பாணம், அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களுக்கான வேட்பாளர் இடஒதுக்கீடு குறித்து ஏற்கனவே முடிவாகியுள்ள போதிலும், வன்னி மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் இணக்கப்பாடு ஏற்படவில்லை.

இந்தநிலையில், இறுதி முடிவெடுப்பதற்காக நேற்று வவுனியாவில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடக்கவிருந்த போதிலும் அது இறுதி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டது. இந்தக் கூட்டம் நாளை நடைபெறும் என்றும், இதில், வேட்பாளர்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து முடிவு செய்யப்படும் என்றும் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

“நாளை கூட்டத்தில் வேட்பாளர்கள் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படும். யாழ்ப்பாண மாவட்டத்தின் நாடாளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதால், முக்கிய வேட்பாளர்களை ஏனைய மாவட்டங்களில் இருந்து தெரிவு செய்ய வேண்டிய கட்டாயம் கூட்டமைப்புக்கு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே, விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளை உள்ளடக்கி கடந்த வெள்ளிக்கிழமை உருவாக்கப்பட்டுள்ள, ஜனநாயகத்துக்கான போராளிகள் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது இரண்டு முன்னாள் போராளிகளை நிறுத்த வேண்டும் என்று கோரியிருந்தது.

ஆனால், இந்த அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு கூட்டமைப்பின் வேட்பாளர்கள் பட்டியலில் இடமளிக்கப்படாது என்று தெரிய வந்திருப்பதாக, கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தெரிவித்துள்ளது.