சம்பூர் காணி சம்பந்தமான வழக்கு முழுமையாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது - சுமந்திரன்
சம்பூர் காணி சம்பந்தமாக தனியார் நிறுவனமான கெற்வேயால் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு முழுமையாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
இதற்கு மேல் அவர்களால் மேன்முறையீடு செய்ய முடியாது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பிரபல சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
சம்பூர் காணிகளை மீள அளிப்பதற்கு தடைவிதிக்க வேண்டுமென பொருளாதார வர்த்தக வலயத்தின் முதலீட்டாளரான கெற்வே நிறுவனத்தினால் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது சம்பந்தமாக விளக்கமளித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் தொடர்ந்து விளக்குகையில்;
2009 ஆம் ஆண்டு சம்பூர் மக்கள் இடம்பெயர்ந்தார்கள். 2012 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி 818 ஏக்கர் காணிகள் பொருளாதார வர்த்தக வலயத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது என வர்த்தமானி அறிவித்தலொன்றை வெளியிட்டிருந்தார். இந்த வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் ரத்து செய்திருந்தார். இந்த ரத்துக்கு இடைக்கால தடையுத்தரவொன்றை கெற்வே நிறுவனம் வாங்கியிருந்தது. இந்த வழக்கே கடந்த வெள்ளிக்கிழமை உச்சநீதிமன்றினால் தள்ளுபடி செய்யப்பட்டு முற்றாக நிராகரிக்கப்பட்டுள்ளது.
ஆகையினால் கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து அந்த நிலங்களுக்கு யார் சொந்தக்காரர்களோ அவர்கள் ஒவ்வொருவருக்கும் அந்த நிலம் உரித்தாக்கப்படுகிறது. இனி எந்தவிதமான தடையும் விதிக்க முடியாது. மக்கள் தங்கள் சொந்த காணிகளை அடையாளம் கண்டுபிடித்து தமது நிலங்களில் இனி குடியேற முடியும். ஆனால் வீடுகளோ, அடிப்படை வசதிகளோ இல்லாத நிலையில் மீள்குடியேற்ற அமைச்சு அதற்கான ஆயத்தங்களை செய்து கொடுக்கும்.
அதற்கு முன்னராக சம்பூர் மக்கள் தங்கள் சொந்த காணிகளை அடையாளம் கண்டு குடியேறுவதற்கான ஏற்பாடுகளை செய்ய முடியும். இதற்கு இனி எவ்வித சட்டத் தடையும் விதிக்க முடியாது.
நாங்கள் சம்பூர் காணி சம்பந்தமாக வழக்கொன்றை உச்சநீதிமன்றில் தாக்கல் செய்தபோது மக்களை மீள் குடியேற்றவே மேற்படி காணிகளை வைத்திருக்கிறோமென அரசாங்கம் குறிப்பிட்டது. இதே வாக்குறுதியை பாராளுமன்றத்திலும் அரசாங்கம் வழங்கியிருந்தது. ஆனால் கொடுத்த வாக்குறுதிக்கு மாறாக அந்த நிலங்களை இவர்கள் முதலீட்டுச் சபைக்கு ஒப்படைத்திருந்தார்கள்.
புதிய ஜனாதிபதி முதலீட்டு சபை வழங்கிய உரிமையை ரத்து செய்தார். அவரது ரத்து வர்த்தமானி பிரகடனம் பிழையென வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை உச்சநீதிமன்றமானது ஜனாதிபதியால் ரத்துச் செய்யப்பட்டமை தொடர்பாக கேள்விக்கு உட்படுத்தப்பட முடியாது என தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆகவே சம்பூர் நிலம் தற்போது சம்பூர் மக்களுக்கே சொந்தமானதாகும் என்றார்.