Breaking News

ஐ.தே.க. தலைமையிலான கூட்டணி எமக்குச் சவாலல்ல: சுசில் பிரேமஜயந்த சொல்கிறார்

ஜனாதிபதித் தேர்தலில் ஏற்படுத்தப்பட்ட கூட்டணியைவிட தற்பொழுது உருவாகியிரு க்கும் கூட்டணி சிறிது என்பதால் பொதுத் தேர்தலில் நல்லாட்சிக்கான ஐ.தே.மு. சவாலாக அமையப் போவதில்லையென ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் நாயகம் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

ஓகஸ்ட் 17ஆம் திகதி நடைபெற விருக்கும் பொதுத் தேர்தலில் 14ற்கும் அதிகமான தேர்தல் மாவட்டங்களை வெற்றிபெற்று ஐ.ம.சு.மு ஆட்சியமைக்கும் என்ற உறுதியான நம்பிக்கை இருப்பதாகவும் அவர் கூறினார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். டலஸ் அலகப்பெரும மற்றும் லசந்த அலகியவண்ண ஆகியோர் கலந்துகொண்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த சுசில் பிரேமஜயந்த, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராகக் களமிறங்கிய தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன், ஜே.வி.பி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்ற பாரியதொரு கூட்டணி இருந்தது.

எனினும், தற்பொழுது உருவாகியுள்ள கூட்டணி கடந்த தேர்தல் கூட்டணியுடன் ஒப்பிடும் போது சிறியது. ஜனாதிபதித் தேர்தலில் ஐ.ம.சு.முவுக்கு 57 இலட்சம் வாக்குகள் கிடைத்திருந்தன. இது எமது கட்சிக்கான வாக்குகள்.

160 தொகுதிகளில் நாம் 89 தொகுதிகளை வென்றிருந்தோம். 13 தேர்தல் மாவட்டங்கள் எம்மால் வெற்றிக்கொள்ளப்பட்டன. 4 தொகுதிகளில் சுமார் 4 ஆயிரம் வாக்கு வித்தியாசங்களால் தோல்வியுற்றோம். பொலனறுவை மாவட்டத்தில் இம்முறை இரட்டை வெற்றிகிடைக்கும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 4 மாவட்டங்களை வெல்லும். எனவே சுமார் 14ற்கும் அதிகமான தேர்தல் மாவட்டங்களை ஐ.ம.சு.மு வெற்றிகொள்ளும்.

ஐ.ம.சு.முவில் அங்கம்வகித்த சிலர் வெளியேறி கூட்டணி அமைத்துள்ளனர். இது எமக்கு சவாலாக அமையாது. கட்சிக்குள் எதுவித பிளவும் இல்லை. வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்டதும் நாளை முதல் தேர்தல் பிரசாரங்களை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் இணைந்திருப்பது ஐ.ம.சு.முவுக்கு மேலும் பலம்சேர்க்கும் வகையில் அமைந்திருப்பதுடன், கட்சியின் ஒற்றுமையைப் பறைசாற்றியிருப்பதாக இங்கு கருத்துத் தெரிவித்த டலஸ் அழகப்பெரும கூறினார். இந்த இரண்டு தலைவர்களும் மிகவும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றியிருப்பதாகக் குறிப்பிட்ட அவர், மக்களுக்கு பொறுப்புக்கூறக்கூடிய மக்கள் பிரதிநிதிகளுடன் ஐ.ம.சு.மு அடுத்த அரசாங்கத்தை அமைக்கும் என்றும் கூறினார்.