Breaking News

‘செக்’ வைக்கும் மைத்திரியின் ஆட்டம் ஆரம்பம் – மகிந்த அணி அவசர கூட்டம்

மகிந்த ராஜபக்சவை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளராகப் போட்டியிடுவதில் இருந்து தானாகவே ஒதுங்கச் செய்வதற்கான திட்டத்தை இலங்கை ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன ஆரம்பித்துள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கமைய, மகிந்த ராஜபக்சவுக்கு மிகவும் நெருக்கமான ஏழு பேர் உள்ளிட்ட எட்டுப் பேருக்கு வேட்பாளர் பட்டியலில் இடமளிக்கக் கூடாது என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் நியமனக் குழுவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசன உத்தரவிட்டுள்ளார்.

இவர்கள் மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் ஊழல், மோசடி, மற்றும் ஏனைய குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியவர்களாவர். மகிந்த ராஜபக்சவை தானாகவே தனது வேட்புமனுவை விலக்கிக் கொள்ள வைப்பதாக மைத்திரிபால சிறிசேன தனக்கு நெருக்கமான அமைச்சர்களிடம் கூறியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மகிந்த ராஜபக்சவுக்கு மிகவும் நெருக்கமானவர்களுக்கு, வேட்புமனு நிராகரிக்கப்பட்ட விவகாரம் மகிந்த தரப்பை கடும் சினத்துக்குள்ளாக்கியிருக்கிறது. மகிந்த ஆதரவு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வேட்புமனுக்களை நிராகரித்து, ஓரம்கட்டும் வேலைகள் நடந்து வருவதாக மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க குற்றம்சாட்டியுள்ளார்.

மகிந்தவுக்கு வேட்புமனு மறுக்கப்பட்டால், தாம் மாற்று ஏற்பாடுகளைச் செய்துள்ளதாகவும் எப்படியும் தேர்தலில் போட்டியிடுவோம் என்றும் அவர் எச்சரித்துள்ளார். இந்தநிலையில், மகிந்த ராஜபக்சவுக்கும் அவருக்கு ஆதரவளிக்கும் அரசியல் தலைவர்களுக்கும் இடையில் இன்று பிற்பகல் அவசரக் கூட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளது.

மகிந்த ராஜபக்சவுக்கு போட்டியிட இடமளிக்க மைத்திரிபால சிறிசேன மறுக்கலாம் என்ற சந்தேகங்கள் வலுத்துள்ள நிலையில் இந்தக் கூட்டம் பிரசன்ன ரணதுங்கவின் வீட்டில் இன்று மாலை 3.30 மணிக்கு நடைபெறவுள்ளது. மைத்திரிபால சிறிசேன அதிகாரபூர்வமாக மகிந்த ராஜபக்சவுக்கு இடமளிக்கமுடியாது என்று அறிவித்தால், அதற்கடுத்த நகர்வுகள் குறித்து இந்தக் கூட்டத்தில் ஆராயப்படவுள்ளது. இதில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் உள்ள மகிந்த ராஜபக்ச ஆதரவுக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.